

10-ம் நூற்றாண்டை சேர்ந்த ரூ.77 கோடி மதிப்புள்ள 8 சாமி சிலைகளை கடத்தல்காரர்களிடம் இருந்து போலீஸார் கைப்பற்றினர்.
தமிழகத்தில் இருந்து பழங்கால சிலைகளை வெளிநாடுகளுக்கு கடத்த இருப்பதாக பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறை கூடுதல் இயக்குநர் பிரதீப் வி.பிலிப்புக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையில் தனிப்படை போலீ ஸார் சென்னையில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். மேற்கு மாம் பலத்தில் ஒரு ஓட்டலில் பதுங்கி இருந்த ஒருவரை பிடித்து விசாரித்த போது, அவர் சிலை கடத்தல் கும் பலை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அவர் கொடுத்த தகவலின் பேரில் வெவ்வேறு இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 8 சாமி சிலைகளை போலீஸார் கண்டுபிடித்து கைப்பற்றினர்.
இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறை கூடு தல் இயக்குநர் பிரதீப் வி.பிலிப் கூறும்போது, “10-ம் நூற்றாண்டை சேர்ந்த சிவன்-பார்வதி சேர்ந்திருக் கும் சிலை, பெருமாள், பார்வதி, உமையாள் சிலைகள், 13-ம் நூற் றாண்டை சேர்ந்த விஷ்ணு, ஸ்ரீதேவி, பூதேவி, சக்கரத்தாழ்வார் என 8 சிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றின் சர்வதேச மதிப்பு ரூ.77 கோடி. இந்த சிலைகளை திரு வண்ணாமலையில் உள்ள 2 கோயில்களில் இருந்து திருடியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப் பட்டு வருகிறது” என்றார்.