

‘மனித வன விலங்கு மோதலைத் தடுக்கவும், மாவோயிஸ்ட்கள் நடமாட்டத்தை ஒடுக்கவும், வன எல்லையோர கிராமங்களில் இணக்கமான சூழலை உருவாக்க வேண்டும்’ என்று வனத்துறை அலு வலர்கள், ஊழியர்களை கோவை மண்டல வனப் பாதுகாவலர் அன்வர்தீன் கேட்டுக்கொண்டார்.
கேரள காடுகளை ஒட்டியுள்ள கோவை மற்றும் நீலகிரி வனப் பகுதிகளில் மாவோயிஸ்ட் ஊடு ருவலை முற்றிலுமாகத் தடுப்பது, இம் மாவட்டங்களில் அதிகரிக்கும் மனித வன விலங்கு மோதலைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்த ஆலோசனை மற்றும் ஆய்வுக் கூட்டம், மேட்டுப்பாளையம் அரசு வனக் கிடங்கு வளாகத்தில் நேற்று நடைபெற்றது. மண்டல வனப் பாதுகாவலர் அன்வர்தீன் தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில், கோவை மற்றும் நீலகிரி மாவட்ட வன அலுவலர்கள், வனக் கோட்ட அலுவலர்கள், வனவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில், தமிழக வனத்தில் தீவிரவாதிகள் நுழைவதை தடுப்பது, இது குறித்து மலைவாழ் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது, யானை, புலி, சிறுத்தை, கரடி போன்ற வன விலங்குகள் ஊருக்குள் நுழைவதை கட்டுப்படுத்தி மனித விலங்கு மோதலைத் தடுப்பது, வனக் குற்றங்களை கண்டறிந்து சட்டப்படி தண்டிப்பது என பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
கூட்டத்தில், வனப் பாதுகாவலர் அன்வர்தீன் பேசியதாவது:
மனித - விலங்கு மோதலைத் தடுக்க, வன விலங்குகள் குறித்து மக்களிடம் உள்ள அச்ச உணர்வைப் போக்க வேண்டும். வன விலங்குகளின் இயல்புகள் குறித்து மக்களிடம் எடுத்துச் சொல்லி புரிதலை ஏற்படுத்தி, வன விலங்குகள் மீது பாசத்தையும் நேசத்தையும் ஏற்படுத்த வன அலுவலர்கள், வனவர்கள், வன ஊழியர்கள் முழுமையாக ஈடுபட வேண்டும்.
வன எல்லைகளில் வசிக்கும் பழங்குடி மக்கள் மற்றும் பொதுமக் களிடம் இந்த சூழலை ஏற்படுத்துதல் மிக அவசியம். அகில இந்திய அளவில் வன உயிரினங்கள் மீது பற்றுதலும், பாசமும், இணக்கமும் கொண்டவர்கள் தமிழக மக்கள். வன விலங்குகளால் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் ஏற்படும்போதுதான் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே, விலங்குகள் குறித்த புரிதலை ஏற்படுத்தி, உயிரிழப்புகள் ஏற்படாத வண்ணம் மக்களிடம் விழிப்புணர்வுகளைத் தொடர்ந்து ஏற்படுத்திவிட்டால் இந்த நிலை நீடிக்காது.
அதேபோன்று, மாவோயிஸ்ட் கள் பிரச்சினையில் வன எல்லையோரம் வசிக்கும் மலை மக்களிடம் எச்சரிக்கை விடுப்பதை தவிர்த்து, அவர்களுடன் நட்புடன் பழகி, மாவோயிஸ்ட்கள் போன்ற வர்களுடன் நெருக்கமாவதால் எந்த மாதிரியான பின் விளைவுகளும், பிரச்சினைகளும் ஏற்படும் என்பதை விளக்கி, அவர்களை உஷார்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.