திருப்பூரில் 2 ஆண்டுகளாக தங்கியிருந்த மாவோயிஸ்ட் தம்பதி: விசாரணையில் அம்பலம்; முக்கிய ஆவணங்கள் சிக்கின

திருப்பூரில் 2 ஆண்டுகளாக தங்கியிருந்த மாவோயிஸ்ட் தம்பதி: விசாரணையில் அம்பலம்; முக்கிய ஆவணங்கள் சிக்கின
Updated on
1 min read

திருப்பூரில் கடந்த 2 ஆண்டுகளாக மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த தம்பதியர் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது. அவர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

கோவை மாவட்டம் கருமத்தம் பட்டியிலுள்ள பேக்கரியில் வைத்து கைது செய்யப்பட்ட 5 மாவோயிஸ்ட் களை 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோவை மாவட்ட முதன்மை நீதிபதி (பொ) எம்.பி சுப்பிரமணியம், கியூ பிரிவு போலீஸுக்கு அனுமதி அளித்திருந்தார்.

15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டுமென, கோவை சரக கியூ பிரிவு துணைக் கண் காணிப்பாளர் சேதுபதி, கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனை நேற்று முன்தினம் விசாரித்த நீதிபதி எம்.பி சுப்பிரமணியம், மே 6 முதல் 10 நாட்கள் விசாரிக்க அனுமதி அளித்தார். கைது செய்யப்பட்டவர்களில் தம்பதியரான ரூபேஷ், சைனி ஆகியோர், கடந்த இரண்டரை ஆண்டுகளாக தங்கியிருந்த திருப்பூர் டி.எம்.எஸ். 2-வது வீதியிலுள்ள வீட்டில், கியூ பிரிவு டிஐஜி ஈஸ்வரமூர்த்தி, கோவை சரக கியூ பிரிவு துணைக் கண்காணிப்பாளர் சேதுபதி உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். தம்பதியரை நேரில் அழைத்து வந்து விசாரணை நடத்தியதால், அப் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதுகுறித்து அப் பகுதியினர் கூறியதாவது:

வீட்டின் உரிமையாளரிடம், மெடிக்கல் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருவதாகக் கூறி, கடந்த 2012 முதல் ரூபேஷ் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. பகல் நேரங்களில் வெளியே சென்றுவிட்டு, இரவில் மட்டும் இருவரும் வீடு திரும்புவார்களாம். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு, தம்பதியரின் 2 மகள்களும் இங்கு வந்து தங்கியதாகவும் கூறப்படுகிறது.

தம்பதியருக்கு வீடு அளித்த உரிமையாளர், திருப்பூரில் செருப்புக் கடை வைத்து, கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வருபவராம். வீட்டின் கீழ் தளத்தில் உரிமையாளரும், மேல் தளத்தில் தம்பதியரும் தங்கியிருந்துள்ளனர். அருகே வசிப்பவர்கள் யாருடனும், தம்பதியர் எந்தவித பழக்கமும் வைத்துக் கொள்வதில்லையாம். மாதத்தில் 10 நாட்களுக்கு மேல், வெளியூர் சென்றுவிடுவார்கள் எனவும் அப் பகுதியினர் தெரிவித்தனர்.

லேப்டாப், மொபைல் போன், 4 சூட்கேஸில் ஆவணங்கள், பயன்படுத்திய பொருட்கள் உள் ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

விசாரணையை முடித்து நேற்று மாலை 6 மணிக்கு வீட்டிலிருந்து தம்பதியரை வெளியே அழைத்து வந்தபோது, ‘நக்சல்பாரி ஜிந்தாபாத், நக்சல் பாரிகள் தேச பக்தர்கள், சிபிஎம் மாவோ ஜிந்தாபாத்’ என்று முழக்கங்களை எழுப்பியவாறு வாகனத்தில் ஏறினர்.

இதையடுத்து அந்த வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகரக் காவல் துணை ஆணையர் இரா.திருநாவுக்கரசு தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in