Published : 04 Mar 2014 07:12 PM
Last Updated : 04 Mar 2014 07:12 PM

சிபாரிசுகளின் தலைவி ஜெயலலிதா: காஞ்சிபுரம் பேச்சுக்கு ஸ்டாலின் பதிலடி

'அதிமுக மத்திய அரசில் பங்கேற்றபோது ஜெயலலிதா 'சிபாரிசுகளின் தலைவி'யாக இருந்தார்' என்று தமிழக முதல்வரின் காஞ்சிபுரம் பிரச்சாரப் பேச்சுக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பதிலடி தந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று தன் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தது:

"தமிழக மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட மத்தியில் அதிமுக இடம்பெறும் ஆட்சி வேண்டும்" என்று காஞ்சிபுரத்தில் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் முழங்கியிருக்கிறார் ஜெயலலிதா.

இவர் கடந்த காலங்களில் மத்திய அமைச்சரவையில் பங்கேற்றபோது என்ன மாதிரி கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறார்? என்னென்ன திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வந்திருக்கிறார் என அவரால் பட்டியலிட முடியுமா?

ஆனால், மத்திய ஆட்சியில் கூட்டணியில் இருந்த போது என்ன கோரிக்கைகள் வைத்தார் என்பதை திமுகவால் பட்டியலிட முடியும்.

வாஜ்பாய் அரசில் நிதியமைச்சராக இருந்த பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான யஷ்வந்த் சின்கா 'சுதேசி சீர்திருத்த வாதியின் வாக்குமூலம்' என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். ஜெயலலிதா அளித்த கோரிக்கைகள் பற்றி அந்த புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

அதில் பக்கம் 226-ல் யஷ்வந்த் சின்கா சொல்லியிருப்பதன் சுருக்கம் இதுதான். "ஜெயலலிதா என்னை சந்திக்க விரும்புகிறார் என்று அ.தி.மு.க. எம்.பி. ஒருவர் சொன்னதன் பேரில் வேறு நிகழ்ச்சிகளுக்காக சென்னை வந்த போது ஒருமுறை போயஸ் கார்டனுக்குச் சென்றேன். அங்கு எங்களுக்கு மிகச்சிறந்த தரமான மதிய உணவு வழங்கப்பட்டது. அந்த மதிய உணவில், நான், நிலக்கரித் துறை இணை அமைச்சர் திலிப் ரே, ஜெயலலிதா ஆகிய மூவர் மட்டுமே இருந்தோம்.

மதிய உணவு முடிந்து, நான் புறப்படத் தயாராகும் போது ஜெயலலிதா என்னிடம் ஒரு 'என்வலப்' கொடுத்தார். அதை பிறகு நான் திறந்து பார்த்தபோது அதில் ஜெயலலிதாவிற்கு எதிராக உள்ள வருமானவரித் துறை வழக்குகள் பற்றிய விவரங்கள் அடங்கிய குறிப்பு வைக்கப்பட்டிருந்தது.

சில நாட்கள் கழித்து நான் பிரதமரைச் சந்தித்தேன். சென்னையில் ஜெயலலிதாவுடன் நடந்த பேச்சுவார்த்தை விவரங்களை அவரிடம் தெரிவித்தேன். ஆனால் அவர் கொடுத்த 'என்வலப்' பற்றிச் சொல்ல மறந்து விட்டேன். நான் பேசி முடித்த பிறகு, மிகவும் எதார்த்தமாக 'ஜெயலலிதா கொடுத்த என்வலப்பில் என்ன விஷயங்கள் இருந்தன?' என்று கேட்டார். நான் திடுக்கிட்டுப் போனேன். அப்போதுதான் நாட்டில் நடக்கும் விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று பிரதமர் நினைத்தால் அவரால் முடியும் என்பதை நான் அறிந்து கொண்டேன்' என்று கூறியிருக்கிறார்.

தன்மீதுள்ள வருமானவரி வழக்குகளிலிருந்து தன்ன காப்பாற்றிக்கொள்ள இந்திய நிதியமைச்சரையே தன் வீட்டிற்கு அழைத்து கொடுத்ததுதான் தமிழக மக்களின் நலனுக்காக வைக்கப்பட்ட கோரிக்கையா?

அது மட்டுமல்ல. ஜெயலலிதாவுக்கு வேண்டிய தலைமைச் செயலாளராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஹரிபாஸ்கர் சஸ்பென்ஷனையும், நெய்வேலி அனல் மின் நிலையத் தலைவர் பூபதியின் சஸ்பென்ஷனையும் மற்றும் சி.ராமச்சந்திரன் சஸ்பென்ஷனையும் ரத்து செய்யக்கோரி கோரிக்கை வைத்தார். இதை தன் கைப்படவே எழுதிக்கொடுத்தார். அதன் பிரதியையும் உங்களின் பார்வைக்கு இணைத்துள்ளேன்.

இப்படி 'சிபாரிசுகளின் தலைவி'யாக அதிமுக மத்திய அரசில் பங்கேற்றபோது ஜெயலலிதா இருந்தார் என்பதுதான் உண்மை.

ஒன்று தன்னை காப்பாற்றிக்கொள்ள மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தார் அப்படியில்லையென்றால் அவருக்கு வேண்டிய அதிகாரிகளை காப்பாற்ற கோரிக்கை வைத்தார். அதையும்விட மேலாக தி.மு.க ஆட்சியை கலைக்கவுமே கோரிக்கை வைத்தார். இவையெல்லாம் மக்கள் நலனில் வைக்கப்பட்ட கோரிக்கையா?

பல ஊழல் வழக்குகளை சந்தித்துக்கொண்டிருக்கும் ஜெயலலிதா தனக்காக கோரிக்கை வைத்துக்கொள்ளவே இப்போதும் மக்களிடம் வாக்கு கேட்கிறார்" என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x