

தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 3-வது அணி அமைய வாய்ப்பே இல்லை என்றார் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன். இதுகுறித்து சேலத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் 3-வது அணி அமைய வாய்ப்பே இல்லை. சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்க்கட்சியினர் விமர்சிக்கின்றனர். அதுவும், ஊழல் செய்தவர்கள்தான் விமர்சிக்கின்றனர். இது சரியல்ல.
பொதுப்பணித் துறையில் 49 சதவீத கமிஷன் வாங்கப்படுவதாக ஒப்பந்ததாரர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்றவுடன் விசாரணை நடத்த வேண்டும்.
குழந்தை தொழிலாளர் முறை சட்டத்தில் அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளதால், தங்களது பாரம்பரிய தொழிலை செய்ய தடை இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இது தவறானது. 4 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வி முறையை அமல்படுத்த வேண்டும்.
ஏழை மாணவ, மாணவிகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றாத தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசு 100 இடங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று கூறிவிட்டு, தற்போது சென்னை உள்ளிட்ட 3 நகரங்களில் மட்டுமே அந்தத் திட்டத்தை நிறைவேற்றுகிறது.
ராமநாதபுரம் போன்ற மாவட் டங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை கொண்டு வந்தால் அந்த மாவட்டங்கள் வளர்ச்சி பெறும். நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றினால் பாஜக மற்றும் மோடியின் வளர்ச்சி வீழ்ச்சி அடையும் என்றார் தமிழருவி மணியன்.