

பூந்தமல்லி அருகே தனியார் செங்கல்சூளை பள்ளத்தில் தவறி விழுந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுவர், சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகே உள்ள கொட்டியம்பாக்கம் கிராமத்தில், ‘களஞ்சியம்‘ என்ற தனியார் செங்கல் சூளை ஒன்று, கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. சென்னை, சைதாப் பேட்டையைச் சேர்ந்த கருணாகரன் என்பவருக்கு சொந்தமான இந்த செங்கல் சூளையில், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டப் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
அந்த தொழிலாளர்களில், விழுப்புரம் மாவட்டம், திருவெண் ணெய்நல்லூர் அருகே உள்ள காந்திக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த வீரன் மற்றும் அவரது மனைவி பூமாதேவியும் அடங்குவர். இருவரும் கடந்த ஜனவரி மாதம் முதல் இந்த செங்கல்சூளையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களது மகள்களான வினிஷா(12), விஷ்ணுப்ரியா(7) மற்றும் மகன் விஷ்வா(9) ஆகியோரும், பள்ளிக்கு கோடை விடுமுறை விடப்பட்டதால், பெற்றோர் பணிபுரியும் செங்கல்சூளையில் தங்கியிருந்தனர்.
இந்நிலையில், நேற்று பகல் குழந்தைகள் 3 பேரும் செங்கல் சூளை பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக 3 பேரில் ஒருவர், செங்கல்சூளையில் மழை நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ள பள்ளம் ஒன்றில் தவறி விழுந்து ள்ளார். இதையடுத்து, மற்ற இருவரும் அவரை காப்பாற்ற பள்ளத்தில் குதித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையறிந்த செங்கல்சூளை தொழிலாளர்கள், பள்ளத்தில் உள்ள நீரில் மூழ்கிய வினிஷா, விஷ்ணுப்ரியா, விஷ்வா ஆகிய 3 பேரையும் தீவிரமாக தேடினர். ஆனால், வினிஷா உள்ளிட்ட 3 பேரையும் தொழிலாளர்கள் சடலமாகவே மீட்க முடிந்தது.
தகவலறிந்த வெள்ளவேடு போலீஸார், 3 பேரின் உடல் களையும் மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பூந்தமல்லி வட்டாட்சியர் பவானி உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.