

சர்வதேச சுற்றுலா தலமான நீலகிரியில் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த ஆண்டு சுமார் 22 லட்சம் பேர் வருகை தந்த நிலையில், இந்த எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
சுற்றுலாப் பயணிகளை கவர, மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை மற்றும் தோட்டக் கலைத்துறை சார்பில் கோடை விழா நடத்தப்படுகிறது. இதில் முக்கியமாக ரோஜா காட்சி, மலர்க் கண்காட்சி, பழக் காட்சி ஆகியவை அடங்கும்.
மே 2-ம் தேதி கோத்தகிரி நேரு பூங்காவில் 8-வது காய்கறி காட்சி மற்றும் கோடை விழா தொடக்கமும், மே 9, 10-ம் தேதிகளில் உதகை ரோஜா பூங்காவில் 14-வது ரோஜா காட்சியும் நிறைவடைந்தன.
இந்நிலையில், வரும் 15-ம் தேதி உதகை தாவரவியல் பூங்காவில் தொடங்கும் 119-வது மலர்க் கண்காட்சி 3 நாள் நடைபெறவுள்ளது. கண்காட்சியில் இடம்பெறும் அலங்காரங்களை பிரம்மாண்டப்படுத்த தோட்டக் கலைத்துறை முடிவு செய்துள்ளது. கொய் மலர்களால் காதல் சின்ன மான தாஜ்மஹால், யானைகள் மற்றும் குழந்தைகளை கவரும் வண்ணம் ஆங்கிரி பேர்ட்ஸ் அலங்காரங்களை காட்சிப்படுத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
மலர்க் கண்காட்சிக்காக பூங்காவில் 100 ரகங்களில் 3 லட்சம் மலர்ச் செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. சுற்றுலாப் பயணி களின் பார்வைக்காக 15 ஆயிரம் தொட்டிகளில் மலர் அலங்காரம் காட்சிப்படுத்தப்படும். இது தவிர 5 வகையான மலர் அலங்காரங்கள் செய்யப்படும். காட்சி மாடத்தில் 15 ஆயிரம் மலர்த் தொட்டிகளை அடுக்கும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆண்டு இத்தாலியன் பூங்காவில் 6 ஆயிரம் மலர்த் தொட்டிகளைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது.