

பெருந்தொழில் முனைவோரை மட்டும் அரவணைத்து ஆதரிக்கும் ஒருதலைப்பட்சமான அணுகுமுறையினைக் கைவிட்டு; சிறு மற்றும் குறுந் தொழில் முன்னேற்றத்திற்கு மத்திய அரசு புதிய கொள்கை ஒன்றினை வகுத்து நடைமுறைப் படுத்திட முன்வர வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
2006-2011 காலக்கட்டத்தில் நடைபெற்ற தி.மு.க ஆட்சியின்போது, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களை ஊக்குவித்து, உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்காக இந்தியாவிலேயே முதன்முறையாக தனியாக ஒரு புதிய கொள்கை வெளியிடப்பட்டு; தொழில் முனைவோருக்கு பல்வேறு வகையான சலுகைகள் வழங்கப்பட்டன.
முதலீட்டு மானியம், குறைந்தழுத்த மின் மானியம், மின்னாக்கி மானியம், மதிப்புக் கூட்டு வரி மானியம், பின் முனை வட்டி மானியம் எனப் பல கோடி ரூபாய் மதிப்பிலான மானியங்கள் வழங்கப்பட்டன. ‘தாய்கோ’ வங்கி மூலம் தொழில் முனைவோர் 5,013 பேருக்கு 10,246 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டு, 70,053 பேருக்குப் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.
ஆனால், அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதற்குப் பிறகு, சிறு, குறுந்தொழில் முன்னேற்றத்தில் எவ்வித அக்கறையும் காட்டாமல் பாராமுகமாக நடந்து கொண்டதாலும், ஊக்குவிப்புகள் இல்லாததாலும், முடிவின்றித் தொடர்ந்த மின் வெட்டுப் பிரச்சினையாலும் தமிழகத்தில் நூற்றுக்கணக்கான சிறு, குறுந் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன; அவற்றில் பணிபுரிந்து வந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து, வாழ்வாதாரத்தைத் தேடி, அண்டை மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து செல்ல வேண்டிய கட்டாயம் நேரிட்டது.
அ.தி.மு.க. ஆட்சியின் அலட்சியம் காரணமாக சீர்குலைந்து போன சிறு - குறுந்தொழில்கள், ‘பட்ட காலிலேயே படும்’ என்பதைப் போல, மேலும் சோதனைகளைச் சந்தித்து தீர வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது. மத்தியில் பா.ஜ.க. அரசு அமைந்ததற்குப் பிறகு, இந்திய நாட்டின் வளர்ச்சியில் சிறு மற்றும் குறுந் தொழிலுக்கு இருக்கும் முக்கியப் பங்கினைப் புறந்தள்ளி, அதன்
முதுகெலும்பை முறிக்கும் முடிவுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. 1967ஆம் ஆண்டில் 800க்கும் மேற்பட்ட பொருள்களை சிறு மற்றும் குறுந் தொழில் மூலம் மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டு, நமது பொருளாதாரத்தில் சிறு - குறுந்தொழில்களுக்கு உள்ள முக்கியத்துவத்தை உணரச் செய்தது.
காலப்போக்கில் அந்த எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கப்பட்டு, கடைசியாக 20 பொருள்கள் மட்டுமே சிறு மற்றும் குறுந் தொழில் பட்டியலில் எஞ்சியிருந்தன.
அந்த 20 பொருள்களையும் பட்டியலில் இருந்து நீக்கி மத்திய பா.ஜ.க. அரசு அண்மையில் ஆணையிட்டுள்ளது. இந்த முடிவு எந்த அளவுக்கு சிறு தொழில் முனைவோரையும், தொழிலாளர்களையும், கிராமப்புறப் பொருளாதாரத்தையும் பாதிக்கும் என்பதை மத்திய அரசு கவனத்தில் கொண்டதாகத் தெரியவில்லை.
ஊறுகாய், மெழுகுவர்த்தி, பூட்டு, தீப்பெட்டி, பட்டாசு, ஊதுவத்தி, இரும்பு மற்றும் அலுமினியப் பாத்திரங்கள், ரொட்டி, நோட்டுப் புத்தகங்கள், கண்ணாடி வளையல் உள்ளிட்ட பொருள்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக பெரிய தொழில் நிறுவனங்கள், சிறு, குறுந் தொழில்களை ஆக்கிரமித்துக் கைப்பற்றிக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
சிறு, குறுந் தொழில் முனைவோரை சோதனைக்கும் துன்பத்திற்கும் ஆளாக்கியிருக்கும் மத்திய அரசின் பிற்போக்கான முடிவு குறித்து, இந்தியத் தொழில் கூட்டமைப்பின் தலைவர் ராஜேஷ்குமார், "சிறு தொழில்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரை வங்கிகள் கடன் வழங்குகின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரை படித்த, கிராமப்புற இளைஞர்கள்தான் அதிக அளவில் இதுபோன்ற வங்கிக் கடனுக்கு விண்ணப்பம் செய்து, தொழில் தொடங்க முன்வருகின்றனர். இவர்கள் தங்கள் சக்திக்கு ஏற்றவாறு தொழில் தொடங்கி, தங்களுடைய குடும்பங்களைக் காப்பாற்றுவதோடு, மற்ற ஏழை, எளிய இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்புகளை அளித்து வருகின்றனர்.
இத்தகைய சிறு, குறுந் தொழில்களைக் கைப்பற்றி அதிக முதலீட்டில், நவீன இயந்திரங்களைக் கொண்டு பெரிய நிறுவனங்கள் நடத்தும் போது, எஞ்சியிருக்கும் சிறு தொழில் முனைவோரும் பெரு முதலாளிகளோடு போட்டியிட முடியாத நெருக்கடி நிலை ஏற்பட்டு நெஞ்சொடிந்து நசுங்கிவிடுவர்" என்று மத்திய அரசின் சிறு தொழிலுக்கு எதிரான நடவடிக்கை எங்கே போய் முடியும் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்.
மத்திய அரசு சிறு, குறுந் தொழில்களை ஊக்குவிப்பதற்காக ‘முத்ரா’ வங்கித் திட்டத்தை தொடங்கி வைத்து, பத்து லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும் என்று அறிவித்து, 20,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது; மறு முனையில், சிறு, குறுந் தொழில் பட்டியலில் மீதமிருந்த 20 பொருள்களையும் நீக்கி இருக்கிறது.
முரண்பாடான இத்தகைய நிலைப்பாட்டினைத் தவிர்த்து; நமது நாட்டில் சிறு விவசாயிகள், சிறு வணிகர், சிறுதொழில் முனைவோர்தான் பல கோடிப் பேர் நிறைந்துள்ளனர் என்பதை நினைத்துப் பார்த்து; சிறு மற்றும் குறுந் தொழில் முனைவோரை நலிவுறச் செய்து, பெருந் தொழில் முனைவோரை மட்டும் அரவணைத்து ஆதரிக்கும் ஒருதலைப்பட்சமான அணுகுமுறையினைக் கைவிட்டு; சிறு மற்றும் குறுந் தொழில் முன்னேற்றத்திற்கு மத்திய அரசு புதிய கொள்கை ஒன்றினை வகுத்து நடைமுறைப் படுத்திட முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.