

தமிழ் மாநில காங்கிரஸின் முதல் செயற்குழு கூட்டம் சென்னையில் வரும் 24-ம் தேதி நடைபெறுகிறது. மாநில நிர்வாகி கள், மாவட்டத் தலைவர்கள் பட்டியலை தமாகா தலைவர் ஜி.கே.வாசன் இன்று வெளியிடுகிறார்.
காங்கிரஸிலிருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், கடந்த நவம்பர் 28-ம் தேதி தமாகா என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். கடந்த ஏப்ரல் 24-ம் தேதி சென்னையில் நடைபெற்ற முதல் பொதுக்குழுவில் கட்சியின் தலைவராக வாசன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இறுதி பட்டியல்
கடந்த ஒரு மாதமாக மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்களை தேர்வு செய்வதற் கான பணியில் வாசன் ஈடுபட்டு வந்தார். ஒவ்வொருவரிடமும் நேரடியாகப் பேசி நிர்வாகிகள் பட்டியலை அவர் இறுதி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து தமாகா மூத்த நிர்வாகி ஒருவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
3 சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஒரு மாவட்டம் என 75 மாவட்டங் களுக்கு தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாநகரம் 6 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மாநில அளவில் பொருளாளர், பொதுச் செயலாளர்கள், துணைத் தலைவர்கள், செயலாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
புதிய நிர்வாகிகள்
மூத்த தலைவர்களான எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், பி.எஸ்.ஞானதேசிகன், பீட்டர் அல்போன்ஸ், பாரமலை ஆகியோர் அரசியல் விவகாரக் குழுவில் இடம்பெறுவார்கள். இளைஞரணி, மகளிரணி உள்ளிட்ட துணை அமைப்புகளுக்கும் மாநில நிர்வாகிகளை 20-ம் தேதி (இன்று) வாசன் அறிவிக்கிறார். 24-ம் தேதி சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள நியூ உட்லண்ட்ஸ் ஹோட்டலில் கட்சியின் முதல் மாநில செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளது.
அதில் புதிய நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்பார்கள் என்றார்.