

வார்டு புறக்கணிப்பட்டதைக் கண்டித்து திருமங்கலம் நகராட்சி அதிமுக பெண் கவுன்சிலர் ராஜினாமா செய்தார்.
திருமங்கலம் நகராட்சி 24-வது வார்டு அதிமுக கவுன்சிலர் சங்கீதா. இவரது கணவர் பிரபு திருமங்கலம் நகர் எம்ஜிஆர் இளைஞரணி இணைச் செயலராக உள்ளார். நேற்று நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு வந்த கவுன்சிலர் சங்கீதா திடீரென தனது ராஜினாமா கடிதத்தை நகராட்சி ஆணையர் அப்துல் ரசீத்திடம் அளித்தார். செய்தியாள ர்களிடம் சங்கீதா கூறியது: எனது வார்டில் கடந்த 4 ஆண்டுகளாக வளர்ச்சிப் பணிகள் முறையாக நடைபெறவில்லை. 4 ஆண்டுகளாக கவுன்சிலர்கள் கூட்டமே நடத்தப் படுவதில்லை. கூட்டத்துக்கு வந்ததும் பயணப் படியை கொடுத்து அனுப் பிவிடுவர். மக்கள் பிரச்சினைகளை பேச அனுமதிப்பதில்லை. அதிகாரம் படைத்தவர்கள் கூறியதை கேட்காவிட்டால் செயல் படவிடாமல் முடக்கும் நிலைதான் உள்ளது. இது குறித்து கட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்துக்கு இப்பிரச்சினை செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். எனது மனநிலையில்தான் பல அதிமுக கவுன்சிலர்கள் உள்ளனர். இனியும் பொறுமைகாக்க மனமில்லாததால் இந்த முடிவை எடுத்துள்ளேன்’ என்றார்.
நகராட்சி தலைவர் உமா விஜயன் கூறியது: சங்கீதாவின் வார்டில் கடந்த 4 ஆண்டுகளாக ரூ.60 லட்சம் மதிப்பில் சாலை, குடிநீர் உள்ளிட்ட பணிகள் நடந்துள்ளன என்றார்.
திருமங்கலம் அதிமுக பிரமுகர்கள் கூறியது: நகராட்சி அருகே கட்டப்பட்ட கடைகளை ஒதுக்கீடு செய்வது, உட்கட்சி மோதல் பின்னணியில்தான் சங்கீதா ராஜினாமா செய்துள்ளார். இதன் பின்னணியில் அதிமுகவில் மாவட்ட அளவில் பொறுப்பில் இருந்தவர்கள் பலர் உள்ளனர் என்றனர்.