பூகம்பம் நிவாரணம் திரட்டும் பணியில் குழந்தைகளை ஈடுபடுத்தியதால் சர்ச்சை

பூகம்பம் நிவாரணம் திரட்டும் பணியில் குழந்தைகளை ஈடுபடுத்தியதால் சர்ச்சை
Updated on
1 min read

நேபாள பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக நிவாரணப் பொருட்களை திரட்டும் பணி திருநெல்வேலியில் நேற்று நடைபெற்றது. இப்பணியில் வெங்காடம்பட்டி டிரஸ்ட் குழந்தைகள் ஈடுபடுத்தப்பட்டது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

நேபாள பூகம்பத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை சேகரித்து அனுப்பும் நேபாள பூகம்ப நிவாரண பணிகள் நேற்று திருநெல்வேலியில் ரயில்நிலையத்தில் காமராஜர் சிலை முன்பிருந்து தொடங்கியது. சமூக ஆர்வலரும், வெங்காடம்பட்டி டிரஸ்ட் குழந்தைகள் இல்லத்தை நடத்துபவருமான பூ.திருமாறன் தலைமை வகித்தார். நிவாரண பொருள்கள் சேகரிக்கும் பணியில் டிரஸ்ட் குழந்தைகள் இல்லத்திலிருந்து 75 குழந்தைகள் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்கள் கடைகடையாக துண்டுபிரசுரங்களை வழங்கி நிவாரண பொருள்களை சேகரிக்க வைக்கப்பட்டனர். காந்தியவாதி விவேகானந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நல்ல நோக்கத்துடன் நடத்தப்பட்ட இந்த பணியில் டிரஸ்ட் இல்லத்திலுள்ள ஆதரவற்ற குழந்தைகளை ஈடுபடுத்தியிருந்தனர். குழந்தைகளை இதுபோன்ற எவ்வித பணிகளிலும் ஈடுபடுத்த கூடாது என்று அரசு அறிவுறுத்தியிருக்கிறது. ஆனால் நிவாரண பணிகளை சேகரிக்கும் பணியில் ஆதரவற்ற குழந்தைகளை ஈடுபடுத்தியிருக்கிறார்கள்.

இது குறித்து திருநெல்வேலி மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ஷகிலாபானுவிடம் கேட்டபோது, `ஆதரவற்ற குழந்தைகளை பொதுநலனுக்காக பேரணியிலோ, நிவாரண பொருட்களை சேகரிக்கவோ, வேறு பணிகளிலோ ஈடுபடுத்துவது தவறாகும். இது குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும்’ என்று தெரிவித்தார்.

திருமாறன் கூறும்போது, `நல்ல நோக்கத்துக்காக இந்த பணி மேற்கொள்ளப்படுகிறது. இதில் குழந்தைகளை ஈடுபடுத்துவது தவறு என்றால் அதை செய்யவில்லை. இந்த பணியில் பள்ளி குழந்தைகளும், பெரியவர்களும் ஈடுபட்டனர்’ என்றார் அவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in