

ரயிலில் குண்டு வைத்த குற்றவாளி கள் குறித்து முக்கிய தடயம் சிக்கியுள்ளதாகவும், அவர்களை சிபிசிஐடி போலீஸார் நெருங்கி விட்டதாகவும் தகவல்கள் வந்துள்ளன.
பெங்களூரில் இருந்து கடந்த 1-ம் தேதி காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்த குவாஹாட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் அடுத்தடுத்து 2 வெடி குண்டுகள் வெடித்தன. இதில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கம்ப்யூட்டர் இன்ஜினீயர் ஸ்வாதி (24) உயிரிழந்தார். மேலும் 14 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். படுகாயம் அடைந்த 6 பேருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதற்கிடையே, குண்டுவெடிப்பு குறித்து தேசிய பாதுகாப்புப் படை மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பைச் சேர்ந்தவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த சென்ட்ரல் ரயில் நிலையத்தை கடந்த 2-ம் தேதி ஆய்வு செய்தனர்.
மேலும் இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீஸாரும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். குண்டுவெடிப்புக்கு சில விநாடிகள் முன்பு ரயிலில் இருந்து இறங்கி ஓடிய மர்ம நபரின் வீடியோ பதிவை சிபிசிஐடி போலீஸார் வெளியிட்டனர். அவரைப் பற்றிய விவரங்களை சேகரித்து வருகின்றனர்.
நெருங்கியது போலீஸ்
பெங்களூரில் இருந்து வந்த ரயிலில் குண்டு வெடித்ததால், அது தொடர்பாக விசாரிக்க சிபிசிஐடி போலீஸாரில் ஒரு பிரிவினர் அங்கு சென்றுள்ளனர். பெங்க ளூர் ரயில் நிலைய கண் காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை அவர்கள் ஆய்வு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணை யில் பல முக்கிய தடயங்கள் கிடைத் துள்ளதாக சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, அங்கேயே முகாமிட்டு தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
குண்டு வெடித்த குவாஹாட்டி ரயிலின் குறிப்பிட்ட 4 பெட்டிகளில் பயணம் செய்தவர்களின் பட்டி யலையும் ஆய்வு செய்து வருகின் றனர். அவர்களிடம் விசாரணை நடத்தவும் போலீஸார் திட்டமிட்டுள் ளனர். குண்டு வைத்த குற்றவாளி களை நெருங்கிவிட்டதாகவும், அவர்களை விரைவில் கைது செய்ய இருப்பதாகவும் சிபிசிஐடி போலீஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தீவிரவாதிகள் ஊடுருவி பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து தமிழகம் முழுவதும் போலீஸார் உஷார்படுத் தப்பட்டுள்ளனர். மாநில எல்லைக ளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
பீதி ஏற்படுத்திய மர்ம பைகள்
சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 10-வது பிளாட்பாரத்தில் சனிக்கிழமை காலை ஒரு மர்ம பை கிடந்தது. இதுபற்றி தகவல் கிடைத்தும், வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து பையை சோதனை செய்தனர். அதில் சந்தேகப்படும்படியான பொருட்கள் எதுவும் இல்லை. இதேபோல ரயில் நிலையத்தில் மற்றொரு பகுதியிலும் ஒரு மர்ம பை கிடந்தது. வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தபோது, அந்தப் பையில் துணிகள்தான் இருந்தது. மேலும், சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தின் பார்க்கிங் இடத்தில் நின்றிருந்த மர்ம பைக் ஒன்றையும் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். மர்ம பைகள் மற்றும் பைக்கால் சென்ட்ரலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பணிமனையில் ரயில் பெட்டிகள்
குண்டுவெடிப்பில் சேதமடைந்த குவாஹாட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் எஸ்-3 எஸ்-4, எஸ்-5 ஆகிய பெட்டிகள் 11-வது பிளாட்பாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அந்தப் பெட்டிகளில் சிபிசிஐடி போலீஸார் உள்ளிட்ட பல அதிகாரிகள் கடந்த 3 நாட்களாக ஆய்வு செய்து வந்தனர். தடயவியல் நிபுணர்களும் ஆய்வு மேற்கொண்டனர்.
அதன்பின், 3 பெட்டிகளும் தனி இன்ஜின் மூலம் பேசின் பிரிட்ஜ் யார்டுக்கு கொண்டு செல்லப்பட்டன.