

அயோத்தி போல மதுராவை மாற்ற பாஜக முயற்சி செய்வதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம் சாட்டி யுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னை வந்துள்ள சீதாராம் யெச்சூரி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த ஓராண்டில் மோடி 18 முறை வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். நேரு முதல் மன்மோகன் சிங் வரை எந்தப் பிரதமரும் செய்யாத சாதனை இது. வெளிநாட்டு பயணங்கள் மூலம் அந்நிய முதலீடு குவிகிறது என்பதெல்லாம் வெறும் மாயை. இதுவரை கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 10 சதவீதத்துக்கும் குறைவான முதலீடுகளே இங்கு வந்துள்ளன.
ஓராண்டு நிறைவு பொதுக் கூட்டத்தை நடத்த உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவை தேர்வு செய்துள் ளனர். அங்கு மோடி உள்ளிட்ட தலைவர்கள் பேசியுள்ளனர். அயோத்தியில் ராமர், மதுராவில் கிருஷ்ணர், காசியில் சிவன் கோயில் கட்ட வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ்.ஸின் கொள்கையாகும். அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் எனக் கூறி நாட்டில் மதவாதத்தை தூண்டியவர்கள், இப்போது மதுராவை குறிவைத் துள்ளனர்.
மத்திய திட்டக் குழு கலைக்கப் பட்டதால் மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு வெகுவாக குறைந் துள்ளது. பல மாநில முதல்வர்கள் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டு காத்திருக்கின்றனர். ஆனால், அவர் வெளிநாட்டுப் பயணத்தில் மும்முரமாக இருக்கிறார்.
கடந்த ஓராண்டில் 50 நிதி மசோதாக்கள் விவாதமின்றி, நிலைக்குழுவுக்கு அனுப்பப் படாமல் மக்களவையில் நிறைவேற்றப் பட்டுள்ளன. மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாததால் அவசரச் சட்டம் மூலம் முக்கிய மசோதாக்களை நிறைவேற்று கின்றனர்.
மேல்முறையீடு
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு தாமதமின்றி மேல் முறையீடு செய்ய வேண்டும் என கட்சியின் மாநிலக் குழு கோரிக்கை விடுத்துள்ளது. அதுவே மார்க்சிஸ்ட் கட்சியின் நிலையாகும்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை முடிவு செய்ய இன்னும் கால அவகாசம் உள்ளது என்று அவர் கூறினார்.
பேட்டியின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் ஆகியோர் உடனி ருந்தனர்.
மோடி அரசுக்கு எத்தனை மதிப்பெண்கள் வழங்குவீர்கள் என கேட்டதற்கு தேர்வு எழுதினால் தானே மதிப்பெண்கள் வழங்க முடியும் என்றார் யெச்சூரி.