

அதிமுக அரசு மீது ஊழல் புகார் கூற திமுகவுக்கு தகுதியில்லை என பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளை யத்துக்கு நேற்று வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்தியில் உள்ள அரசுக்கு மாநிலங்களவையில் போதிய பலமில்லை என்பதை பயன்படுத்தி, நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்ப்பவர்கள், நாட்டின் வளர்ச்சியை தடுக்க நினைக்கும் தேச விரோதிகள். ஏனென்றால் தேசிய அளவில் சாலை விரிவாக்கத் திட்டங்கள், ரயில்வே போக்குவரத்து விரிவாக்கப் பணிகள், நதிகள் இணைப்புத் திட்டம் என அனைத்து முக்கிய வளர்ச்சித் திட்டங் களுக்கும் இச் சட்டம் அவசியமாகிறது.
காங்கிரஸ் தலைமையிலான முந்தைய அரசு ஏற்கெனவே கொண்டுவந்த ரியல் எஸ்டேட் மசோதாவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிப்பது விநோதமானது. பால் உற்பத்தியாளர்களான விவசாயிகளுக்குப் பாதகமாக தமிழக அரசு செயல்பட்டால், விவசாயிகளுடன் பாஜக இணைந்து மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபடும். தமிழகத்தை, திமுக மற்றும் அதிமுக கட்சிகள் ஆட்சியில் இருந்தபோதெல்லாம் சீரழித்துவிட்டன என அன்புமணி ராமதாஸ் கூறிய கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு. கோவையில் 5 நக்ஸல் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. தமிழகம் முழுவதும் இதுகுறித்து தீவிர ஆய்வு நடத்தப்பட வேண்டும்.
அதிமுக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டு கூற திமுகவுக்கு எந்தவித தகுதியும் இல்லை. ஏனெனில், திமுக தலைமையின் குடும்ப உறுப்பினர்கள் பலரும் ஊழல் புகாரில் சிக்கி வழக்குகள் நடைபெற்று வருகின்றன.
கர்நாடக அரசு மேகேதாட்டு என்னுமிடத்தில் அணை கட்ட, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி வாங்க வேண்டியது அவசியம். மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், இத் திட்டத்துக்கு அமைச்சகம் அனுமதி வழங்காது என அறிவித்துள்ளார். இதனால் கர்நாடக அரசு மேகேதாட்டுவில் அணை கட்ட இயலாது. எனவே இது பற்றிய கவலை தேவையில்லை. இவ்வாறு எச்.ராஜா தெரிவித்தார்.