

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை விருப்பமுள்ள மாநிலங்கள் அமல்படுத்தலாம் என்று மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் கூறியுள்ளார்.
இந்திய உணவுக்கழகம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தலைமை யில் சென்னையில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் இந்திய உணவுக் கழக அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்துக்கு பிறகு ராம்விலாஸ் பாஸ்வான் நிருபர் களிடம் கூறியதாவது:
நிலம் கையகப்படுத்தும் சட்டம் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் எழுந்துள்ளன. பிஹார் உள்ளிட்ட சில மாநிலங்களில் இளைஞர்களுக்கு வேலை கிடைக்காமல் அவர்கள் பிற மாநிலங்களுக்கு செல்கின்றனர். இந்த சட்டத்தின் மூலம் அவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இந்த சட்டத்தை விருப்பமுள்ள மாநிலங்கள் கொண்டுவரலாம்.
மழை, வெள்ளம் மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் விவசாயிகளுக்கு முதல்முறையாக பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. உற்பத்தி குறைவான மாநிலங் களில் இருந்து இந்திய உணவுக் கழகம் உற்பத்திப் பொருட்களை கொள்முதல் செய்வதில்லை. தமிழகத்தை பொறுத்தவரை 30 லட்சம் டன் புழுங்கல் மற்றும் 6 லட்சம் டன் பச்சரிசி தேவைப்படுகிறது. இந்த தேவையை நிறைவு செய்ய ஆந்திரா, பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் இருந்து அரிசி வாங்கப்படுகிறது. தற்போதைய சூழலில் ஆறு மாதங்களுக்கான அரிசி கையிருப்பில் உள்ளது.
பிஐஎஸ் சட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த சட்டங்கள் நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடரில் கொண்டுவரப்படும். நுகர்வோர் நீதிமன்றங்கள் வலுப்படுத்தப்படுவதுடன், வழக்கறிஞர்கள் உதவியின்றி நுகர்வோரே தங்கள் குறைகள் குறித்து வாதாடும் வகையில் விதிகளில் திருத்தம் செய்யப்பட உள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளி வர்த்தகத்தில் பிஐஎஸ் தர நிர்ணயம் அவசியம். பிஐஎஸ்சட்டப்படி, தங்க விற்பனையா ளர்கள் தங்கத்தின் தரம் குறித்த விவரங்களை மக்கள் பார்வையில் படும்படி வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.