

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, கிரீமிலேயர் உச்ச வரம்பை உயர்த்த வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பிற்படுத்தப்பட்டோருக்கான தேசியக் கமிஷன், ஓபிசி என்று அழைக்கப்படும் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள் பயன்பெறும் வகையில், கிரீமிலேயர் உச்ச வரம்பை, தற்போதுள்ள ஆறு இலட்சம் ரூபாய் என்பதிலிருந்து, 10.50 இலட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு வரவேற்கத் தக்க பரிந்துரை ஒன்றைச் செய்துள்ளது.
இந்தப் பரிந்துரையை மத்திய பாஜக அரசு ஏற்றுக் கொண்டால், இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களைச் சேர்ந்த கோடிக் கணக்கானவர்களுக்கு, மத்திய, மாநில அரசுகளில் வேலை வாய்ப்பு மற்றும் கல்வியில் மேலும் கூடுதலாக இட ஒதுக்கீட்டுப் பலன்கள் கிடைக்கும் என்பதால், மத்திய பாஜக அரசு உடனடியாக முன் வந்து இந்தப் பரிந்துரையை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று, இட ஒதுக்கீட்டிற்காகத் தொடர்ந்து பாடுபட்டு வரும் இயக்கம் திமுக என்ற முறையில் அதன் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறேன்.
திமுக தேர்தல் அறிக்கையிலேயே ''பிற்படுத்தப் பட்டோருக்கான 27 சதவிகித இட ஒதுக்கீடு முழுமையாக பின்பற்றப் படாமல், மத்திய அரசின் ஏ,பி,சி,டி ஆகிய பிரிவுகளில் உள்ள இடங்களில் இன்றைய நிலையில் 14 சதவிகிதம் மட்டுமே இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது கவலைக்குரிய ஒன்றாகும். இதைத் தீர்க்க தி.மு. கழகம் மத்திய அரசை வலியுறுத்தும்" என்று ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளது.
இட ஒதுக்கீடு என்பது திராவிட இயக்க வரலாற்றில் உயிர்நாடியான அத்தியாயமாகும். சமூக நீதியின் உறுதியான அடிப்படைக் கூறுதான் இட ஒதுக்கீடு. மண்டல் குழுவின் பரிந்துரைகளை உடனடியாக நிறைவேற்றிட வேண்டுமென்று மத்திய அரசினை வலியுறுத்தி, தமிழகச் சட்டப் பேரவையில் 12- 5-1989 அன்று நான் முதலமைச்சராக இருந்த போது, கழக ஆட்சியில் தான் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
திமுக தொடர்ந்து வலியுறுத்தி வந்ததன் காரணமாக 12-6-1990 அன்று பிரதமர் வி.பி. சிங் அனைத்து மாநில முதல் அமைச்சர்களுக்கும் மண்டல் கமிஷன் பரிந்துரைகள் பற்றிக் கருத்துக்களைக் கேட்டு, அந்த மாத இறுதியிலேயே அதற்கு நான் பதில் எழுதி - அதைப்பற்றி பின்னர் பிரதமர் வி.பி. சிங் கூறும்போது, மத்திய அரசின் சார்பில் எழுதப்பட்ட கடிதத்திற்கு உடனடியாக பதில் எழுதிய மாநிலம் தமிழ்நாடு மட்டும் தான் என்று பாராட்டினார்.
7-8-1990 அன்று மத்திய அரசு நிறுவனங்களிலும், பொதுத் துறை நிறுவனங்களிலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.
மத்திய அரசு வேலை வாய்ப்புகளில் மட்டும் 27 சதவிகித இட ஒதுக்கீடு சமூக நீதிக் காவலர் வி.பி. சிங் அவர்களால் கிடைத்த நிலையில், கல்வி நிலையங்களிலும் இதரப் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு வேண்டும் என்று தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகம் போராடி வந்தது.
2004ஆம் ஆண்டில் மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி அமைந்ததற்குப் பிறகு அப்போது மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த அர்ஜுன் சிங் மூலமாகக் கோரிக்கை வைத்து, அவரும் தீவிரமாக முயற்சிகள் மேற்கொண்டு, இதரப் பிற்படுத்தப்பட்டோருக்குக் கல்வி நிலையங்களில் 27 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கான ஆணைகளைப் பெற்றுத் தந்தார்.
எனினும் நடைமுறையில் இருந்து வந்த கிரீமிலேயர் பிரிவினருக்கான வருமான வரம்பினை உயர்த்தி மேலும் பெருமளவுக்கு பிற்படுத்தப்பட்டோர் பயன் அடைவதற்கான வழிவகைகளைச் செய்ய வேண்டுமென்று திமுக தொடர்ந்து குரல் எழுப்பியும், தீர்மானம் நிறைவேற்றியும் வந்த போதிலும், அந்த வருமான வரம்பு உயர்த்தப்படாமலே இருந்து வந்தது.
தற்போது அந்த உச்ச வரம்பினைத் தான் அதாவது ஆறு இலட்சம் ரூபாய் என்பதிலிருந்து பத்தரை இலட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டுமென்று தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
பிற்படுத்தப்பட்டோருள் வேறுபாடுகளை ஏற்படுத்தும், கிரீமிலேயர் பிரிவினர் என்ற ஒன்றே இட ஒதுக்கீட்டில் இருந்திடக் கூடாது என்பது தான் திமுக அந்நாள் தொட்டு மேற்கொண்டு வரும் உறுதியான நிலைப்பாடு.
எனினும் கிரீமிலேயர் இருப்பதன் காரணமாக 27 சதவிகித இட ஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்பட முடியாமலும், இதர பிற்படுத்தப்பட்டோர் அரசு வழங்கிடும் பயன்கள் அனைத்தையும் பெற முடியாமலும் இருந்து வரும் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, உடனடியாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, தேசியப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் இந்தப் பரிந்துரைகளை ஏற்று உடனடியாக ஆணை வெளியிடவேண்டும்'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.