

இந்திய ஆற்று நன்னீர் மீன்களின் கவுரவமாக கருதப்படும் பொன் மீன் (Golden Mahseer) காவிரி ஆற்றின் சீரழிவு காரணமாக முற்றிலும் அழியும் அபாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஆய்வுத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இங்கிலாந்தின் போர்ன்மவுத் பல்கலைக்கழகம் மற்றும் கொச்சியை சேர்ந்த புனித ஆல்பர்ட் கல்லூரி ஆகியவை இணைந்து சமீபத்தில் காவிரி நதிப் படுகையில் நன்னீர் மீன்கள் தொடர்பான ஆய்வை மேற்கொண்டன.
இதைத் தொடர்ந்து ‘அழிந்து வரும் நன்னீர் உயிரினங்கள்’ என்கிற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை வெளி யிடப்பட்டுள்ளது. அதில், “இந்திய நன்னீர் மீன்களின் கவுரமாக மஹசிர் மீன் கருதப்படுகிறது. குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலை நதிகளில் இந்த மீன்கள் அதிகம் காணப்படுகின்றன. கர்நாடகாவின் சிருங்கேரி பகுதியில் மக்கள் இந்த மீனை புனிதமாக கருதி வழிபடுகின்றனர். கடந்த 1980-களில் மகாராஷ்டிரத்தின் ஆறுகளிலும் கர்நாடகாவின் காவிரியிலும் மீன் வளத்தை அதிகரிப்பதற்காக மஹசீர் போன்றே இருக்கும் நீல மீன்கள் வெளியே இருந்து கொண்டுவந்து விடப்பட்டன.
ஆனால், நீல மீன்களின் அபரிமித இனப் பெருக்கம், மஹசிர் மீன்களின் வாழ்விடங்களை ஆக்கிரமிப்பது, மஹசிர் மீன் குஞ்சுகளை இரையாக கொள்வது உள்ளிட்ட காரணங்களால் பாரம்பரிய மஹசிர் மீன்கள் அழியத் தொடங்கின. இதனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் கர்நாடகம், தமிழகம் பகுதி காவிரி ஆற்றில் கோல்டன் மஹசிர் மீன்கள் 50 சதவீதம் அழிந்துவிட்டன. இவை தவிர, ஆற்றின் ஆக்கிரமிப்பு, கழிவுகள் கலப்பது, மணல் கொள்ளை உள்ளிட்ட சீரழிவுகளால் வருங்காலத்தில் இந்த நன்னீர் மீன் முற்றிலும் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மீன்கள் ஆராய்ச்சியாளரான கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் துறை இணை பேராசிரியர் மணிமேகலன் ‘தி இந்து’விடம் கூறுகையில், “உலகில் சுமார் 5785 நன்னீர் மீன்கள் இருப்பதாக இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (IUCN) பட்டியலிட்டுள்ளது. இவற்றில் 36 சதவீதம் மீன்கள் அழியும் அபாயத்தில் உள்ளன. சுமார் 60 உயிரினங்கள் 1500 ஆண்டுகளுக்கு முன்பே அழிந்துவிட்டன. இந்தியாவில் கோல்டன் மஹசிர், டெக்கன் மஹசிர், குதிரி மஹசிர், முசலா மஹசிர் ஆகிய சிற்றினம் வகை நன்னீர் மஹசிர் மீன்கள் காணப்படுகின்றன.
காவிரி ஆற்றில் இருப்பது டெக்கன் மஹசிர் மீனாகும். இது தமிழில் பொன் மீன் என்றும் கன்னடத்தில் ‘பெளி’ மீன் என்றும் அழைக்கப்படுகிறது. சராசரியாக ஒன்பது அடி நீளத்தில் 40 கிலோ எடை கொண்டதாக இவை வளரும். ஆனாலும், இதுவரை 96 கிலோ வரை மஹசிர் மீன் பிடிபட்டுள்ள தற்கான ஆதாரங்கள் இருக்கின் றன. புலி எவ்வாறு ஒரு காட்டின் வளமையின் குறியீடோ அப்படித் தான் மஹசிர் மீன்கள் ஆறுகளின் வளமைக் குறியீடாக கருதப்படு கிறது. இவற்றை இந்திய ‘ஆற்று மீன்களின் அரசன்’ என்றும் குறிப் பிடுவார்கள். அதன்படி காவிரி ஆற் றின் வளமையை குறிக்கும் கவுரவ மாக இந்த மீன் கருதப்படுகிறது.
நன்னீர் மீன்களிலேயே இவை தான் அதிகபட்ச ஆற்று கழிவுகளை உட்கொண்டு தண்ணீரை சுத்தம் செய்கின்றன. வளமான ஆற்றின் பல்லுயிர் சமநிலைக்கு இவை முக்கிய காரணியாகவும் அமை கின்றன. ஆனால், காடுகளில் வன விலங்குகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் மீன்களுக்கு அளிக்கப்படுவதில்லை.
பாதுகாக்கப்பட்ட காடுகளில் மீன் பிடித்தல், வெடி வெடித்து மீன் பிடித்தல், ஆற்றின் வாழ்விடங்கள் ஆக்கிரமிப்பு, மணல் அள்ளுதல், காடுகள் அழிப்பால் ஏற்படும் மண் சரிவு காரணமாக ஆற்றின் பாதை களில் தடை ஏற்படுவது கழிவு நீர் கலப்பது போன்ற காரணங்களால் தற்போது காவிரி ஆற்றில் மஹசிர் மீன்களை காண்பதே அரிதாக போய் விட்டது. இந்த நிலை தொடர்ந்தால் இன்னும் சில ஆண்டுகளில் இந்த மீன் இனம் முற்றிலும் அழிந்துவிடும்.” என்றார்.