Published : 18 May 2015 08:17 AM
Last Updated : 18 May 2015 08:17 AM

தீர்ப்பு விமர்சிக்கப்படுவதால் ஜெயலலிதா முதல்வராக பதவியேற்கக் கூடாது: டாக்டர் கே.கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பின் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருப்பதால், அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா முதல்வராக பதவியேற்கக்கூடாது என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

மதுரையில் செய்தியாளர் களிடம் நேற்று அவர் கூறியது:

தவறாக தீர்ப்பு வழங்கும்போது அந்த வழக்கை தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்து தீர்ப்பு வழங்கிய உதாரணங்கள் உள்ளன. ஆனால், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் மவுனமாக இருப்பது ஏனென்று தெரியவில்லை.

நீதிபதி குமாரசாமியின் கணக்கீட்டில் இமாலய தவறு நடைபெற்றுள்ளது. சொத்து மதிப்பை சரியாக கணக்கிட்டு இருந்தால் நிச்சயம் தண்டனை வழங்கப்பட்டிருக்கும்.

ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பில் மத்திய அரசின் தலையீடு உள்ளது. அவசரம் அவசரமாக சொத்து மதிப்பை தவறாக கணக்கீடு செய்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அச்சுறுத்தல், மிரட்டல், ஆசைவார்த்தை அளிக்கப்பட்டதுதான் இந்த தவறுக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகம் கொள்ள செய்கிறது. மிகப்பெரிய அதிகார மையத்தில் இருந்து நெருக்கடி கொடுக்கப்பட்டிருக்கலாம்.

நீதிபதி குன்ஹா தீர்ப்பு வழங்கிய பிறகு ஜெயலலிதா வழக்கில் நடைபெற்ற விவகாரங்களில் சிந்துபாத் கதை போல் மர்மம் நீடிக்கிறது.

இது குறித்து சர்வதேச விசாரணை அமைப்பை வைத்து விசாரிக்க வேண்டும்.

நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதில் கர்நாடக அரசு தாமதம் செய்யக்கூடாது. மேல்முறையீடு செய்வதன் மூலம் கர்நாடக அரசுக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தைப் போக்க வேண்டும். சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பின் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருப்பதால், ஜெயலலிதா முதல்வராக பதவியேற்கக்கூடாது. அவர் முன்மாதிரியாக திகழ வேண்டும் என்றார் கிருஷ்ணசாமி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x