

கோவை அருகே கைது செய்யப் பட்ட 5 மாவோயிஸ்ட்களை 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கியூ பிராஞ்ச் போலீஸுக்கு மாவட்ட முதன்மை நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கி யது.
கோவை மாவட்டம், கருமத்தம் பட்டி பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் இருந்த மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த மதுரை பழைய குயவர்பாளையத்தைச் சேர்ந்த சந்திரன் மகன் கண் ணன்(46), கேரள மாநிலம் கொச் சியை அடுத்துள்ள குஷத் பகுதி யைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் ரூபேஷ் (எ) பிரவீன் (எ) பிரகாஷ் (எ) பிரசாந்த் (45), இவரது மனைவி சைனா (எ) சைனி(42), கேரளம், பத்தனம்திட்டா கும்பளபொய்கா பகுதியைச் சேர்ந்த ஜார்ஜ் மகன் அனுப்(31), கூடலூர் காட்டு மன்னார்குடி, கொள்ளுமேடு பகுதி யைச் சேர்ந்த சின்னப்பிள்ளை மகன் வீரமணி (எ) ஈஸ்வர் (எ) சர (எ) சுனில்குமார்(60) ஆகிய 5 பேர், கடந்த 4-ம் தேதி கைது செய்யப்பட்டனர். விசாரணைக்குப் பின்னர் அவர்கள் மீது கூட்டுச் சதி, தேச விரோதம், சட்ட விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து, கோவை மாவட்ட முதன்மை நீதிபதி (பொறுப்பு) எம்.பி.சுப்ரமணியம் முன்னிலை யில் நேற்று முன்தினம் ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களை வரும் ஜூன் 3-ம் தேதி வரை கோவை மத்திய சிறையில், நீதி மன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், கைது செய்யப் பட்டவர்களிடம் இருந்து மாவோ யிஸ்ட் இயக்கம் தொடர்பான தகவல்களையும், வெவ்வேறு இடங் களில் அவர்கள் பதுக்கி வைத்துள்ள ஆயுதங்களையும் பறிமுதல் செய்ய வேண்டும். எனவே, அவர் களை 15 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் எனக் கோரி கோவை சரக கியூ பிராஞ்ச் துணை கண்காணிப்பாளர் சி.சேதுபதி, கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தார்.
இதன் மீதான விசாரணை நீதிபதி எம்.பி.சுப்ரமணியம் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாவோயிஸ்ட்கள் 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அபுபக்கர், பாலமுருகன் ஆகியோர், போலீஸ் காவலுக்கு அனுமதிக்கக் கூடாது. ஏனெனில், மத்திய அர சின் ஆணைப்படி இதுபோன்ற வழக்கை விசாரிப்பதற்கு சென்னை பூந்தமல்லியில் சிறப்பு நீதி மன்றம் உள்ளது. எனவே, இந்த வழக்கை அங்கு மாற்ற வேண்டும். போலீஸ் காவல் கொடுக்கலாமா, வேண்டாமா என்பதை அந்த நீதி மன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் என வாதிட்டனர்.
அவர்களது வாதத்தை எதிர்த்து வாதிட்ட அரசுத் தரப்பு வழக் கறிஞர் ஆறுமுகம், மத்திய அரசு அதுபோன்ற ஆணையை பிறப் பித்திருந்தாலும், அதே ஆணையில், மாநில அரசுக்கும் முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளது. எனவே, இந்த நீதிமன்றமே போலீஸ் காவ லுக்கான மனுவை பரிசீலித்து அனுமதி வழங்கலாம் எனத் தெரி வித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, “இந்த நீதி மன்றத்தின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே, அவர்களை கைது செய்யும் அதிகாரமும், போலீஸ் காவ லுக்கு அனுமதி அளிக்கும் அதி காரமும் மாவட்ட முதன்மை நீதி மன்றத்துக்கு உள்ளது. இதன் மீது எவ்வித கேள்வியும் எழுப்ப முடியாது. மேலும், கியூ பிராஞ்ச் போலீஸார் அளித்த மனு ஏற்கப்பட்டு, சம்பந்தப்பட்ட வர்களை இன்றைய தேதியில் (நேற்று) இருந்து 10 நாட்கள் காவ லில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்படுகிறது” என்றார்.
அப்போது, குற்றம் சாட்டப்பட்ட தரப்பு வழக்கறிஞர்கள் குறிக்கிட்டு, “போலீஸ் காவல் விசாரணையின் போது 5 பேரையும் தினமும் எங்க ளில் ஒரு வழக்கறிஞர் பார்ப்ப தற்கு அனுமதி அளிக்க வேண்டும். மேலும், குற்றம்சாட்டப் பட்டவர்களில் ஒருவரான சைனா வுக்கு பல் சிகிச்சைக்கு அனுமதி அளிக்க வேண்டும்” என கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, போலீஸ் காவல் விசாரணையின்போது தின மும் ஒருமுறை மட்டும் 10 நிமிடம் ஒரு வழக்கறிஞர் பார்ப் பதற்கு நீதிபதி அனுமதி வழங் கினார். அதேபோல், நீதிமன்றத்தில் இருந்து அழைத்துச் செல்லும்போது சைனாவின் பல் பிரச்சினைக்கு தேவையான முதலுதவி சிகிச் சையை அளித்து கூட்டிச் செல்லு மாறு உத்தரவிட்டார்.
நீதிமன்ற விசாரணைக்குப் பின்னர் அங்கிருந்து 5 பேரும் அழைத்துச் செல்லப்பட்டபோது முழக்கங்களை எழுப்பியவாறே சென்றனர். தமிழக, ஆந்திர போலீஸாரும் இணைந்து தங்களை என்கவுன்ட்டர் செய்யப் போகிறார்கள் என சத்தமிட்டவாறே சென்றனர்.
எங்கள் பெற்றோர் எந்த தவறும் செய்யவில்லை
முன்னதாக, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாவோயிஸ்ட்கள் ரூபேஷ், அவரது மனைவி சைனா ஆகியோரை அவர்களது மகள்கள் அமி, சவேரா, உறவினர் ராஜேஷ் ஆகியோர் சென்று பார்த்தனர். சிறையில் இருந்து வெளியே வரும்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், “எங்கள் பெற்றோர் எவ்வித தவறும் செய்யாமலேயே பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தனர்.