காட்டாற்று வெள்ள சேதத்துக்குப் பிறகு சதுரகிரி கோயிலில் தூய்மை பணிகள் தொடங்கியது

காட்டாற்று வெள்ள சேதத்துக்குப் பிறகு சதுரகிரி கோயிலில் தூய்மை பணிகள் தொடங்கியது
Updated on
1 min read

காட்டாற்று வெள்ளத்தால் சேறும் சகதியுமான சதுரகிரி கோயில் களைத் தூய்மைப்படுத்தும் பணிகள் நேற்று தொடங்கின.

சதுரகிரி மலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காட்டாற்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் 8 பேர் உயிர் இழந்தனர். தூத்துக்குடி மாவட்டம் புதியம் பத்தூரை சேர்ந்த குருசாமி என்பவரைக் காணவில்லை. வனத் துறையினரும், தீயணைப்பு வீரர்களும் 4 குழுக்களாகப் பிரிந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட குருசாமியைத் தேடி வருகின்றனர். மேலும், சதுரகிரி மலை வனப் பகுதிக்குள் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

காட்டாற்று வெள்ளத்தில் சதுரகிரி மலையில் உள்ள சந்தன மகாலிங்கம் மற்றும் சுந்தர மகாலிங்கம் கோயில்கள் சேறும் சகதியுமாக உள்ளன. திங்கள்கிழமை மாலை மீண்டும் காட்டாறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. சதுரகிரி மலையில் தொடந்து 4 நாட் களாக அவ்வப்போது மழை பெய்துவருவதால் கோயிலை தூய்மைப்படுத்தும் பணி தாமதமானது. அதையடுத்து, கோயில்களைச் சுத்தம் செய்யும் பணி நேற்று தொடங்கியது.

இந்து அறநிலையத் துறை அலுவலர்கள் தலைமையில் 15-க்கும் மேற்பட்ட கோயில் ஊழியர்கள் கோயில் வளாகத்தை சுத்தப்படுத்தி வருகின்றனர். வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட செடி, கொடிகள், மரக் கிளைகள் போன்றவையும், கோயிலுக்குள் இருந்த சேறும் சகதியும் நேற்று அகற்றப்பட்டன. இருப்பினும், சதுரகிரி மலையில் அவ்வப்போது பெய்யும் சாரல் மழையால் தூய்மைப் பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in