

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மே 20-ம் தேதி இடியுடன் கூடிய கன மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
லட்சத் தீவு அருகே கேரள கரையோரத்தில் கடந்த 4 நாட்களாக காற்று மேல் அடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இது காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறவில்லை என்றாலும், தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய காரணமாக இருந்து வருகிறது. காற்று மேல் அடுக்கு சுழற்சி இன்னமும் நீடிப்பதால், தமிழகத்தில் மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் புதன்கிழமை திருவண் ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட் டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்றும் 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பரவலாக பல இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று பதிவான மழை அளவின் படி, கன்னியாகுமரி மாவட்டம் நாகர் கோவிலில் 11 செ.மீ., திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் 9 செ.மீ., புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர், கன்னியாகுமரி மாவட்டம் மைலாடி, நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஆகிய இடங்களில் 8 செ.மீ. மழை பெய்துள்ளது.
பலமான காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் வீசக்கூடும் என்பதால், தென் மாவட்டங்களில் உள்ள மீனவர்கள் கடலுக்குள் செல்லும்போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.