ப.சிதம்பரம் விமர்சிப்பது கேலிக்குரியது: கோவையில் மத்திய அமைச்சர் ஜவடேகர் ஆவேசம்

ப.சிதம்பரம் விமர்சிப்பது கேலிக்குரியது: கோவையில் மத்திய அமைச்சர் ஜவடேகர் ஆவேசம்
Updated on
2 min read

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மீது முன்னாள் டிராய் தலைவர் பிரதீப் பைஜல் வைத்த குற்றச்சாட்டுகளை மேற்கோள் காட்டி, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை மத்திய அமைச்சர் ஜவடேகர் இன்று கடுமையாக விமர்சனம் செய்தார்.

மேலும், மோடி அரசு மீது ப.சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்களின் விமர்சனங்களை அவர் கடுமையாக சாடினார்.

கோயம்புத்தூரில் இன்று செய்தியாளர்களை அவர் சந்தித்தபோது, முன்னாள் டிராய் தலைவர் பிரதீப் பைஜல், 2ஜி விவகாரத்தில் ஒத்துழைப்பு வழங்காவிடில் பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டி வரும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தன்னை எச்சரித்ததாக அதிர்ச்சிக் குற்றச்சாட்டை வைத்ததாக ஜவடேகர் குறிப்பிட்டார்.

"பைஜலின் குற்றச்சாட்டு முந்தைய ஆட்சி ஊழலில் கூட்டணி அமைத்துள்ளதை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது" என்றார்.

டிராய் முன்னாள் தலைவர் பிரதீப் பைஜல் தானே வெளியிட்ட "The Complete Story of Indian Reforms: 2G, Power and Private Enterprise - A Practitioner’s Diary"-யில் "2ஜி ஊழல் ஐமுகூ ஆட்சியின் தொலைத்தொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன் பொறுப்பு வகித்தபோது தொடங்கியது என்று கூறியதோடு, 'நான் ஒத்துழைக்கவில்லையெனில் எனக்கு பங்கம் ஏற்படும் என்று அவர்கள் (சிபிஐ) என்னை ஒவ்வொரு முறையும் எச்சரித்து வந்தனர். இதைத்தான் பொருளாதார நிபுணர் - பிரதம மந்திரியும் என்னிடம் கூறினார்' என்று அவர் தன் நூலில் கூறியுள்ளார்.

இதனையடுத்து மத்திய அமைச்சர் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை 'ஊழலில் கூட்டணி' அமைத்த ஆட்சி என்று சாடியுள்ளார்.

மேலும், கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் திட்டங்களைத்தான் பாஜக ஆட்சி தற்போது வேறு பெயரில் கூறிவருகிறது என்று ப.சிதம்பரம் கூறியது பற்றி ஜவடேகர் கூறும்போது, "இது கேலிக்குரியது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில் திட்டங்கள் பற்றி ஒருவரும் அறிந்திருக்கவில்லை. நாங்கள் எங்கள் திட்டங்களின் மூலம் அனைவருக்கும் வங்கிக் கணக்குகள், காப்பீடு என்று மக்களுக்கு அதிகாரம் வழங்கியுள்ளோம்.

காங்கிரஸ் தலைவர்கள் வேறு வழியின்றி கையறு நிலையில் விமர்சனங்கள் செய்து வருகின்றனர். ஒருவரும் அவற்றை தற்போது காது கொடுத்து கேட்பதில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நோக்கம் வேலைவாய்ப்பைப் பெருக்குவது, காங்கிரஸின் நோக்கம் வேலையின்மையை ஏற்படுத்துவது. மோடி அரசின் வளர்ச்சித் திட்டங்களினால் உலக நாடுகள் இந்தியாவை பாராட்டத் தொடங்கியுள்ளன.

விவசாயிகள் மகிழ்ச்சி...

கடந்த 10 ஆண்டுகளாக இருந்து வந்த சமூகப் பாதுகாப்பின்மை, விலைவாசி உயர்வு ஆகியவற்றிலிருந்து எங்கள் ஆட்சி மக்களை விடுவித்து வருகிறது. அதே போல் மோடி தனிமனித தர்பார் நடத்துகிறார் என்ற விமர்சனமும் ஆதாரமற்றது. பிரதமர் மோடி அதிகாரப்பரவலை மிகவும் நம்புகிறவர். அதற்காகத்தான் அவர் பணியாற்றி வருகிறார்.

நிலச்சட்டம் பற்றி விவசாயிகளுக்கு அதிருப்தி இல்லை. அவர்கள் மகிழ்ச்சியாகவே இதனை வரவேற்கின்றனர். ஆனால், எதிர்ப்பதோ எதிர்கட்சிகளே" என்றார்.

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாட்டுவில் அணைகட்ட முயன்று வருவது பற்றி கேள்வி எழுப்பிய போது, "தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராக நாங்கள் எதையும் செய்ய மாட்டோம். எந்த ஒரு மாநிலத்தையும் பாகுபாடு செய்யும் பேச்சுக்கே இடமில்லை" ஜவடேகர் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in