Published : 21 May 2015 08:27 AM
Last Updated : 21 May 2015 08:27 AM

ஜெயலலிதா பதவியேற்பு விழாவுக்கு தயாராகிறது சென்னை பல்கலை. அரங்கம்: பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க அதிமுகவினர் ஏற்பாடு

தமிழக முதல்வராக ஜெயலலிதா 23-ம் தேதி பதவி ஏற்பது உறுதியாகிவிட்ட நிலையில், சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ஜெயலலிதா, 23-ம் தேதி மீண்டும் தமிழக முதல்வராக பதவியேற்கிறார். இதற்காக நாளை காலை 7 மணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம், கட்சித் தலைமை அலுவலகத்தில் நடக்கிறது. இதில், சட்டப்பேரவை கட்சித்தலைவராக ஜெயலலிதா தேர்வு செய்யப்படுகிறார். அதைத் தொடர்ந்து முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்கிறார். இதுகுறித்த கடிதங்கள் ஆளுநர் ரோசய்யாவிடம் வழங்கப்படும். அதை ஏற்று ஆட்சி அமைக்க வருமாறு ஜெயலலிதாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுப்பார்.

இதையடுத்து, நாளை மறுநாள் (23-ம் தேதி) ஜெயலலிதா தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்கிறது. இதற்கான விழா, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகள் அங்கு தீவிரமாக நடந்து வருகின்றன. அரங்கை புதுப்பிப்பது, விஐபிகளுக்கு இருக்கை ஒதுக்குவது, பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட பணிகள் இரவு, பகலாக நடக்கிறது.

இதற்கிடையே, நாளை பிற்பகல் 2 மணிக்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள எம்ஜிஆர், அண்ணா சிலைகளுக்கும் அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கும் ஜெயலலிதா மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். 7 மாதங் களுக்குப் பிறகு போயஸ் தோட்ட வீட்டில் இருந்து வெளியில் வரும் ஜெயலலி தாவுக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க அதிமுகவினர் தயாராகி வருகின்றனர். போயஸ் தோட்டத்தில் இருந்து அண்ணா சாலை வரை வரவேற்பு பேனர்கள், கொடிகள், தோரணங்கள் கட்ட ஏற்பாடு செய்துள்ளனர்.

அதேபோல, நாளை மறுநாள் பதவியேற்பு விழாவுக்கு வரும் ஜெயலலிதாவை வரவேற்று கடற்கரை சாலையிலும் பேனர்கள் வைக்க திட்டமிட்டுள்ளனர்.

மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு

தமிழக முதல்வராக 23-ம் தேதி சென்னை பல்கலை. நூற்றாண்டு விழா அரங்கில் ஜெயலலிதா பதவியேற்கிறார். தமிழக ஆளுநர் ரோசய்யா அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். ஜெயலலிதாவுடன் 31 அமைச்சர்களும் பதவியேற்கின்றனர். இவ்விழாவி்ல் மத்திய அரசு சார்பில் அமைச்சர்கள் அருண்ஜெட்லி மற்றும் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக பாஜக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x