Published : 26 May 2015 07:27 AM
Last Updated : 26 May 2015 07:27 AM

மூன்று மாநில விவசாய அமைப்பினர் கூட்டம் ஒத்திவைப்பு

தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா மாநில விவசாயிகளிடையே நேற்று ஈரோட்டில் நடைபெறுவதாக இருந்த ஆலோசனை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இது தொடர்பாக அகில இந்திய மஞ்சள் விவசாயிகள் சங்க தலைவர் பி.கே.தெய்வசிகாமணி ஈரோட்டில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பல பிரச்சினைகளால் பாதிக்கப் பட்டுள்ளனர். விளைபொருளுக்கு உரிய விலை கொடுக்காததால், வங்கி கடனை விவசாயிகளால் கட்ட முடியவில்லை. வங்கிகள் கொடுக்கும் நெருக்கடியால் மனமுடைந்த விவசாயிகள் பலர் தற்கொலை செய்து கொண்டுள் ளனர். 10 கோடி பேர் விவசாயத்தை விட்டு வெளியேறி நகரப்பகுதிகளில் கூலிகளாக வேலை பார்க்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

விவசாய நிலத்தின் சந்தை மதிப்புக்கும், அரசின் வழிகாட்டி மதிப்பிற்கும் (கைடு லைன் வேல்யூ) மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. இதனால் அரசு நிலத்தை கையகப்படுத்தினால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர். ராணுவம், சாலை போக்குவரத்து போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு விவசாயிகளிடம் பேசி அரசு நிலத்தை பெறலாம். தனியார் தொழிற்சாலைகளுக்கு விவசாய நிலத்தை அரசு பிடுங்கி தரக்கூடாது. சந்தை மதிப்பில் அவர்கள் நிலத்தை வாங்க முடியவில்லை என்றால் அதற்கு அரசு மானியம் கொடுக்கலாம்.

இது போன்று நாடு முழுவதும் விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகளை எதிர்கொள்ள, தீர்வு காண அனைத்து விவசாய அமைப்புகளையும் ஒருங்கி ணைத்து, ‘மகா பஞ்சாயத்து’ என்ற அமைப்பை ஏற்படுத்த உள்ளோம். இதில் இரு மாநிலங்க ளுக்கு இடையே தீர்க்கப்படாத பிரச்சினைகள் குறித்து பேசுவ தில்லை என்று முடிவு செய்துள் ளோம். பொதுவாக இது போன்ற பிரச்சினைகளில் விவசாயிகள் தரப்பை கேட்காமல், அரசுகள் இரு மாநில விவசாயிகளின் உணர்ச்சியை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கின்றனர்.

தமிழகம், கேரளா, கர்நாடக மாநில விவசாய அமைப்பினரை இன்று அழைத்து ஆலோசிக்க முடிவு செய்து இருந்தோம். ஆனால், தமிழக விவசாய அமைப்புகளிடம் முழுமையாக ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்பதால் இதனை ஒத்தி வைத்துள்ளோம். தமிழக விவசாயிகள் சங்கத்தின் செல்லமுத்து, வெங்கடாசலம், என்.எஸ்.பழனிசாமி, சிவசாமி பிரிவினர் எங்களது ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். மேலும், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கடலூர், திருச்சி மாவட்ட விவசாய சங்கங்கள் பங்கேற்றுள்ளனர். விடுபட்டவர்களையும் ஒன்று சேர்த்து ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்படும். அது எடுக்கும் முடிவின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்றார்.

கர்நாடக விவசாய அமைப் பினர் காவிரி பிரச்சினை குறித்தும், கேரளா விவசாய அமைப்பினர் முல்லை பெரியாறு குறித்தும் முதலில் விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்ததால், கடைசி நேரத்தில் இந்த ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டதாகவும் விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x