

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, திமுகவுடன் கூட்டணி அமைவதற்கான வாய்ப்பில்லை என பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சொத்துக் குவிப்பு மேல் முறை யீட்டு வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய அமைச்சர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழக பாஜக முன்னாள் தலைவரும், மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன், மீண்டும் ஜெயலலிதா முதல்வராக வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அதிமுக பாஜக இடையே ஏற்பட்டுள்ள நெருக்கம் குறித்து ‘தி இந்து’விடம் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுதலையான ஜெயலலிதாவுக்கு பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர்களும் வாழ்த்து தெரிவித்தது அரசியல் நாகரிகத்தின் வெளிப்பாடாகும். இதில் எந்த உள்நோக்கமும் இல்லை.
ஜெயலலிதா விடுதலையானது தொடர்பாக கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். சில தலைவர்கள் கற்பனையான வாதங்களை வைத்து மத்திய அரசு மீது பழிபோட்டு பிரச்சினையை திசை திருப்ப முயல்கின்றனர். அது எடுபடாது. நீதிமன்றங்களின் செயல்பாடுகளில் மத்திய அரசு தலையிடுவதில்லை. இனியும் தலையிடாது.
அதிமுகவைப் பொறுத்தவரை ஜெயலலிதாவே வலிமையான தலைவர். முதல்வர் பதவிக்கான துணிச்சலும், திறமையும் அவருக்கு உள்ளது. அவர் முதல்வரானால் அரசு நிர்வாகம் சிறப்பாக நடைபெறும். வளர்ச்சித் திட்டங்கள் வேகம் எடுக்கும். இப்போது வழக்கிலிருந்தும் அவர் விடுதலையாகியுள்ளார். எனவே, ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டும் என கோரிக்கைவிடுத்தேன். இதில் அரசியல் நோக்கம் எதுவும் இல்லை. திமுகவாக இருந்தால் கருணாநிதி முதல்வராக வேண்டும் என கோரிக்கைவிடுத்திருப்பேன்.
பாஜகவைப் பொறுத்தவரை அதிமுக, திமுக இரண்டையும் தோற்கடிக்கவே விரும்புகிறோம். வரும் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, திமுகவுடன் கூட்டணி அமைவதற்கான வாய்ப்பு இல்லை. தமிழகத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதே எங்களது விருப்பம் என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.