விவசாயிகள் தற்கொலை: தமிழக அரசுக்கு ஸ்டாலின் அறிவுரை

விவசாயிகள் தற்கொலை: தமிழக அரசுக்கு ஸ்டாலின் அறிவுரை
Updated on
1 min read

விவசாயிகளின் தற்கொலைகளைத் தடுக்க முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மனிதநேயத்துடன் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று ஸ்டாலின் எழுதியுள்ள முகநூல் பதிவில், ''முதல்வர் தொகுதிக்குட்பட்ட தேனி மாவட்டத்தில் வாழை சாகுபடி செய்யும் விவசாயி தற்கொலை செய்து கொண்ட செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன் .மனம் வேதனைப்பட்டேன். வாழை விவசாயத்தில் கிடைக்கும் உற்பத்தி பொருள்களுக்கு உரிய விலை கிடைக்காததால் கடனில் தத்தளித்துக் கொண்டிருந்த அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இரு வாரங்களுக்கு முன்பு பருவ மழை தவறியதால் தன் பருத்தி விவசாயம் அழிந்து போனதைப் பார்த்து மனமுடைந்த பருத்தி விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். விவசாயமும், அதைச் சார்ந்துள்ள விவசாயிகளும் தமிழகத்தில் மிக மோசமான நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள் என்பது இந்த தற்கொலை சம்பவங்களில் இருந்து தெரிகிறது.

பல்வேறு கட்டமாக போராட்டங்கள் நடத்தியும் விவசாய உற்பத்தி பொருள்களுக்கு உரிய குறைந்த பட்ச விலையைக் கூட அரசு கொடுக்க மறுத்து வருகிறது. போதாக்குறைக்கு விவசாயக் கடன்களுக்கு வழங்கப்படும் வட்டி மான்யத்தையும் குறைக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

தமிழகத்தில் எத்தனை விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்பதை விட, இந்த தற்கொலைகளை மனித நேயத்துடன் பார்க்க வேண்டியது அதிமுக அரசின் தார்மீக கடமை.

தங்களின் விவசாயமும் பாதிக்கப்பட்டு, குடும்பத் தலைவரையும் இழந்து வாடும் அந்த விவசாயக் குடும்பங்கள் மோசமான பாதிப்பிற்குள்ளாகியுள்ளன. இந்த துயரங்கள் ஒருபுறம் நிகழ்ந்து கொண்டிருக்க, அதிமுக ஆதரிக்கும் மத்திய அரசு விவசாயிகளின் சமூக பாதுகாப்பாகத் திகழும் நிலங்களையும் பறிப்பதற்கு நிலம் எடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வருகிறது.

தமிழக விவசாயிகள் படும் வேதனைகளைப் புரிந்து கொண்டு அவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு மனித நேயத்துடன் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in