

நாமக்கல், ஈரோடு மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறையினர், காவல் துறையினரின் பாதுகாப்புடன் அனுமதியின்றி செயல்பட்டு வந்த 30 சாயப்பட்டறைகளை ஞாயிற்றுக்கிழமை பொக்லைன் மூலம் இடித்து தரைமட்டமாக்கினர்.
இந்நிலையில், இரண்டாவது நாளாக திங்கள்கிழமை சாயப்பட்டறைகளை அகற்றும் பணி தொடர்ந்தது. பள்ளிபாளையம், ஆவுத்திப்பாளையம், கலியனூர், சமயசங்கிலி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், அனுமதியின்றி செயல்பட்ட 48 சாயப்பட்டறைகளை பொக்லைன் மூலம் அகற்றினர்.
இந்தப் பணி தொடர்ந்து நடைபெறும் என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.