திண்டிவனம் - கிருஷ்ணகிரி சாலைத் திட்ட தாமதத்தைக் கண்டித்து மே 27-ல் பாமக போராட்டம்

திண்டிவனம் - கிருஷ்ணகிரி சாலைத் திட்ட தாமதத்தைக் கண்டித்து மே 27-ல் பாமக போராட்டம்
Updated on
2 min read

திண்டிவனம் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி வரும் 27ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு அந்த சாலையில் 16 இடங்களில் பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''அதிமுக அரசின் ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளால் தமிழ்நாடு எண்ணற்ற பாதிப்புகளை எதிர்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட பல்வேறு திட்டங்கள் அதிமுக அரசால் முடக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் முதன்மையான ஒன்று ரூ.610 கோடியில் திண்டிவனம் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் திட்டமாகும்.

புதுச்சேரி - கிருஷ்ணகிரியை இணைக்கும் 66 ஆம் எண் தேசிய நெடுஞ்சாலையின் அகலத்தை இப்போதுள்ள 7 மீட்டரிலிருந்து 10 மீட்டராக விரிவுபடுத்த திட்டம் வகுக்கப்பட்டது. இதில் புதுச்சேரி முதல் திண்டிவனம் இடையிலான பணிகள் முடிவடைந்து விட்டன.

திண்டிவனம் முதல் கிருஷ்ணகிரி வரையிலான 170 கி.மீ. நீள சாலையை அகலப்படுத்தும் பணிகள் 2010 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. இச்சாலையில் 2 பெரிய பாலங்கள், 16 சிறிய பாலங்கள், 366 குறும்பாலங்கள் மற்றும் 2 தொடர்வண்டி மேம்பாலங்கள் அமைக்கப்பட வேண்டும்.

இதுதவிர, திண்டிவனம், திருவண்ணாமலை, செஞ்சி, ஊத்தங்கரை உள்ளிட்ட 9 இடங்களில் 43.42 கி.மீ. நீளத்திற்கு புறவழிச்சாலைகள் அமைக்கப்பட வேண்டும். ஆந்திரத்தை சேர்ந்த டிரான்ஸ்ட்ராய் நிறுவனம் இந்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

2011 ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சிக்கு வந்ததுமே இத்திட்டப்பணிகளுக்கு முட்டுக்கட்டைகள் போடப்பட்டன. கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சாலைப் பணிகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த சாலைப்பணிகள் நிறைவடைந்திருக்க வேண்டும். ஆனால், இன்னும் 40% பணிகள் கூட முடிவடையவில்லை. மேலும் வழக்கமான பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படாததால் இந்த சாலை மிகவும் மோசமடைந்திருக்கிறது.

குறிப்பாக திருவண்ணாமலை - கிருஷ்ணகிரி இடையிலான சாலை பல்லாங்குழியாக காட்சியளிக்கிறது. திண்டிவனம் - திருவண்ணாமலை இடையிலான சாலை போக்குவரத்திற்கு ஏற்றதாக இல்லை. திண்டிவனம் - கிருஷ்ணகிரி இடையிலான 170 கி.மீ. தொலைவை சாதாரணமாக 2.5 மணி நேரத்தில் கடக்க முடியும். ஆனால், இப்போது இந்த தூரத்தைக் கடக்க 6 முதல் 7 மணி நேரம் ஆகிறது.

இரவு நேரங்களில் இந்த சாலையில் செல்வது சாகசப் பயணமாகவே இருக்கும். மழைக் காலங்களில் இரவு நேரத்தில் பயணம் செய்தால் விபத்துக்குள்ளாவதை தவிர்க்கவே முடியாது.

கடந்த சில மாதங்களில் மட்டும் இச்சாலையில் ஏற்பட்ட விபத்துக்களில் 50 பேர் உயிரிழந்திருக்கின்றனர். திருவண்ணாமலை மலைவலத்திற்காக வருபவர்கள் சாமி கும்பிடுவதைவிட, சாலையின் இந்த நிலைக்கு காரணமானோரை சாபமிடுவது அதிகரித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகம் ஆகிய மாநிலங்களை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணியில் மத்திய, மாநில அரசுகள் காட்டும் அலட்சியம் கடும் கண்டனத்துக்குரியது.

இத்தனை அவலங்களுக்கும் காரணம் தமிழகத்தை ஆள்வோரின் ஊழலும், பணத்தாசையும் தான். இத்திட்டத்தை செயல்படுத்துவதற்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்காக முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட வேண்டும். இன்று வரை அந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படவில்லை.

சாலைக்கான கருங்கல் ஜல்லிகளை வெட்டி எடுக்க அனுமதி அளிப்பதற்காக தமிழக பொதுப்பணித்துறை, சுங்கத் துறை அதிகாரிகளும், ஆளுங்கட்சியினரும் பெருமளவில் கையூட்டுக் கேட்பதாகவும், திட்டப்பணிகள் தாமதம் ஆவதற்கு இதுதான் முக்கியக் காரணம் என்று இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய அதிகாரிகளே குற்றம்சாட்டியிருக்கின்றனர்.

அரசின் இந்த அணுகுமுறை காரணமாக தமிழகத்தில் 8 நெடுஞ்சாலைத் திட்டங்கள் முடங்கிக் கிடக்கின்றன. சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையே பறக்கும் பாலம் அமைக்கும் திட்டத்திலும் முன்னேற்றம் இல்லை. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கானத் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுவதும், இதில் ஊழல் செய்யத் துடிப்பதும் கண்டிக்கத்தக்கவை.

திண்டிவனம் - கிருஷ்ணகிரி சாலைத் திட்டத் தாமதத்திற்கு பொறுப்பேற்பதிலிருந்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமும் தப்ப முடியாது. இத்திட்டத்திற்கு தமிழக அரசு ஒத்துழைக்காவிட்டால், உரிய சட்டப்பிரிவுகளை பயன்படுத்தி மாநில அரசு மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

இத்தகைய சூழ்நிலையில், திண்டிவனம் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி வரும் 27ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு அந்த சாலையில் 16 இடங்களில் பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம், தீவனூர், நாட்டார்மங்கலம், செஞ்சி, ஆலம்பூண்டி, கடலாடிக்குளம் கூட்டுச்சாலை, திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம், கீழ்பெண்ணாத்தூர், திருவண்ணாமலை, கோளாப்பாடி, எரையூர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிங்காரப்பேட்டை, ஊத்தங்கரை, மத்தூர், ஜெகதேவி, கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in