இந்தியாவின் பழமை வாய்ந்த வனவியல் அருங்காட்சியகம் மீண்டும் திறப்பு

இந்தியாவின் பழமை வாய்ந்த வனவியல் அருங்காட்சியகம் மீண்டும் திறப்பு
Updated on
1 min read

கோவையில் உள்ள வனவியல் அருங்காட்சியகம் மக்கள் பயன்பாட்டுக்காக நேற்று மீண்டும் திறக்கப்பட்டது.

கோவை ஆர்.எஸ். புரத்தில் வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அங்கு, கடந்த 1902-ம் ஆண்டில் அப்போதைய வனத்துறை அலுவலர் ஹாரஸ் ஆர்ச்சிபால்ட் காஸ் என்பவரால் வனவியல் அருங்காட்சியகம் கட்டமைக்கப்பட்டு, ஆளுநர் ஆம்தில் என்பவரால் திறந்து வைக்கப்பட்டது.

அருங்காட்சியகம் அமைய ஹாரஸ் ஆர்ச்சிபால்ட் காஸ் காரணமாக இருந்ததால், அவரது பெயரே கடந்த 1905-ம் ஆண்டில் அருங்காட்சியகத்துக்கு சூட்டப்பட்டது. தொடர்ந்து, அந்த அருங்காட்சியகம் கடந்த 1915-ம் ஆண்டில் புதிய கட்டிடத்தில் பென்லேண்ட் பிரபு என்பவரால் விரிவுபடுத்தப்பட்டது. இந்தியாவின் மிகவும் பழமையான வனவியல் அருங்காட்சியகமாக இது உள்ளது. பல்வேறு வகையான பறவை, விலங்கினங்கள், மரங்கள், தாவர வகைகள் இடம்பெற்றுள்ளன.

மேலும், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பொறியியல் வேலைப்பாடு எவ்வாறு இருந்தது, பாலத்தை எப்படிக் கட்டினார்கள், அதற்கு என்னென்ன கயறுகளை பயன்படுத்தினார்கள், மரத்தை எப்படி வளர்த்தார்கள் என்பன குறித்தும் அருங்காட்சியகத்தில் வடிவமைப்பு மாதிரிகளுடன் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. பல்வேறு வனவியல் கூறுகளை அறிந்து கொள்ளும் விதமாக அருங்காட்சியகம் உள்ளது.

இந் நிலையில், பொருளாதார மற்றும் நிர்வாகக் காரணங்களால், கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு மூடப்பட்ட அருங்காட்சியகம், தற்போது புனரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு நேற்று முதல் கொண்டு வரப்பட்டுள்ளது. அருங்காட்சியகத்தை அந்த நிறுவனத்தின் இயக்குநர் ஆர்.எஸ்.பிரசாந்த் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில், முதன்மை வனப் பாதுகாவலர் செந்தில்குமார், எஸ்டேட் அலுவலர் பி.அருள்ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். அருங்காட்சியகம் சனி, ஞாயிறு மற்றும் மத்திய அரசு விடுமுறை நாட்களைத் தவிர்த்து ஏனைய அனைத்து நாட்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை செயல்படும். பொதுமக்கள் விருப்பத்துக்கு ஏற்ப காட்சி நேரத்தையும் மாற்றுவதற்குத் தயாராக உள்ளோம் என எஸ்டேட் அலுவலர் பி.அருள்ராஜன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in