

தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள் மீதான ஊழல்களை விசாரிக்குமாறு அளிக்கப்பட்ட மனு மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி பாமக சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பாமக தலைவர் ஜி.கே.மணி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
ஊழல் என்பது சமூகத்துக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் பொது நிர்வாகத்துக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. தமிழகத் தில் அமைச்சர்கள், அதிகாரிகள் பெருமளவில் ஊழல் நடவடிக்கை யில் ஈடுபட்டு வருகின்றனர். கனிமவள முறைகேட்டின் மூலம் ரூ.5 லட்சம் கோடிக்கு முறைகேடு நடந்துள்ளதாக ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கடந்த 2012 மே 19-ம் தேதி அறிக்கை அனுப்பியுள்ளார்.
தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட கடலோர கிராமங்களில் கடல் மணலில் இருந்து தாதுப் பொருட்கள் எடுக்கப்படுகின்றன. இப்பகுதிகளில், கடந்த 2002 முதல் 2012-ம் ஆண்டு வரை 20 லட்சம் டன் மானசைட், 2.35 லட்சம் டன் தோரியம் ஆகியவை சட்டவிரோதமாக எடுக்கப்பட்டுள்ளன. இதனால் அரசுக்கு ரூ.60 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களிடம் இருந்து ரூ.1,208 கோடிக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டு அதன்மூலம் ரூ.900 கோடிக்கு முறைகேடு நடந்துள்ளது.
இதேபோல வீட்டு வசதி வாரியம், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், சத்துணவு திட்டத்துக்கு கொள்முதல் செய்யப்படும் முட்டை போன்றவற்றிலும் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன. எனவே அமைச்சர்கள், அதிகாரிகள் மீதான ஊழல்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநர் ரோசய்யாவிடம் கடந்த பிப்ரவரி 17-ம் தேதி புகார் மனு கொடுத்தோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்கள் புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க ஆளுநரின் செயலாளர், தமிழக தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப் பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி எம்.சத்திய நாராயணன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கே.பாலு ஆஜராகி வாதிட்டார். அப்போது, ‘ஒரு மாநில ஆளுநருக்கு நீதிமன்றம் எப்படி உத்தரவிட முடியும்? மாநில ஆளுநருக்கு கோரிக்கை மனுவை பரிசீலிக்க வேண்டும் என்று இதுவரை எந்த மாநில உயர் நீதிமன்றமாவது உத்தரவிட்டுள்ளதா? அந்த உத்தரவு தங்களிடம் உள்ளதா?’ என கேள்வி எழுப்பிய நீதிபதி, விசாரணையை ஜூன் 9-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.