

திருநெல்வேலி மாநகராட்சியில் கடந்த 2011-ல் அதிமுக சார்பில் மேயர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற விஜிலா சத்தியானந்த் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். புதிய மேயராக கடந்த செப்டம்பர் மாதத்தில் போட்டியின்றி புவனேஸ்வரி (அதிமுக) தேர்வு செய்யப்பட்டார்.
இடைப்பட்ட காலத்தில் பொறுப்பு மேயராக துணைமேயர் பூ.கணேசன் (அதிமுக) பதவி வகித்தார். அப்போது பல்வேறு சாலைப் பணிகளுக்கு ஒப்பந்தப் புள்ளி வழங்கியதில் சர்ச்சை கிளம்பியது. புவனேஸ்வரி மேயராக பொறுப்பேற்ற பின், `துணைமேயர் பதவி வகித்த காலத்தில் நடந்த சாலைப் பணிகளில் வெளிப்படைத் தன்மை இல்லை’ என கூறி அவற்றை ரத்து செய்தார்.
அதிலிருந்து மேயருக்கும், துணைமேயருக்குமான மோதல் பனிப்போராக மாறியது. கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தப் பட்டது. தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், எடப்பாடி பழனிச் சாமி, பழனியப்பன், வைத்திய லிங்கம், திருநெல்வேலி மாநகர் மாவட்டச் செயலாளர் எஸ்.முத்து கருப்பன் உள்ளிட்டோர் பங்கேற் றனர்.
இரு தரப்பிடமும் தனித்தனியாக விசாரணை நடந்தது. இரு தரப்பினரும் சரமாரியாக புகார் தெரிவித்தனர். ஆட்சிக்கு கெட்டப் பெயர் ஏற்படாமல் செயல்படுமாறு இருதரப்பினரும் அறிவுறுத்தப் பட்டனர். இனியும் இத்தகைய புகார்கள், சச்சரவுகள் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று மாலையில் திருநெல்வேலி மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மேயர், துணைமேயர் மற்றும் 4 மண்டல தலைவர்களை அழைத்து சமரசப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. விஜிலா சத்தியானந்த் எம்.பி., முன்னாள் மேயர் ஜெயராணி, கட்சி நிர்வாகிகள் கணேசராஜா, சுதாபரமசிவன், பரணிசங்கர லிங்கம், செந்தில்ஆறுமுகம், பாப்புலர்முத்தையா ஆகியோர் மட்டுமே பங்கேற்றனர்.
அலுவலக கதவுகளும், ஜன்னல்களும் பூட்டப்பட்டு ரகசியமாக இந்த சமரசப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மாநகர் மாவட்டச் செயலாளர் எஸ்.முத்துக்கருப்பன் எம்.பி. தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றபோது மேயருக்கும், துணை மேயருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது இருவரும் தனிப் பட்ட விதத்தில் கடுமையான வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. ஒருகட்டத்தில் மேயர் புவனேஸ்வரி கண்ணீர் மல்க கூட்டத்திலிருந்து வெளியேறிச் சென்றுவிட்டார். இதனால் அலுவலகத்தின் வெளியே காத்திருந்த அதிமுகவினரிடையே சலசலப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக மேயரின் கருத்தை அறிவதற்காக பலமுறை தொடர்பு கொண்டபோதும் தொலைபேசி அழைப்பை அவர் ஏற்கவில்லை. ஆனால் துணைமேயரிடம் கேட்டபோது மீண்டும் பேச்சுவார்த்தைக்காக சென்று கொண்டிருப்பதாக மட்டும் தெரிவித்தார்.
பாளையங்கோட்டையிலுள்ள முத்துக்கருப்பன் எம்.பி. வீட்டில் நேற்று இரவு மீண்டும் 2-ம் கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.