

நாகப்பட்டினத்தில் மீன்வள பல்கலைக்கழகம் அமைக்க ரூ.40 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக 2012-13-ம் ஆண்டில் ரூ.8 கோடியும், 2013-14-ம் ஆண்டுக்கு ரூ.54.64 லட்சமும், 2014-15-ம் ஆண்டுக்கு ரூ.13.65 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருவள்ளூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் மீன்வள தொழில்நுட்ப நிலையங்கள் அமைத்திட தலா ரூ.34.07 கோடி ஒப்பளிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்கடல் பகுதிகளில் கடல் மீன்வளத்தை அதிகரிக்க 17 இடங்களில் செயற்கை பவளப்பாறைகள் நிறுவுவதற்கு ரூ.2.63 கோடி ஒப்பளிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் மற்றும் சுனாமி மறுசீரைமப்பு திட்டத்தின் கீழ் ரூ.17.65 கோடி செலவில் சென்னை மீன்பிடித் துறைமுகத்தினை நவீனப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டு 95 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
ரூ.78.93 லட்சம் செலவில் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரிய நிதியுதவியுடன் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஜெகதாப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டத்திலுள்ள முடசலோடை ஆகிய இடங்களில் மீன் இறங்குதளங்களை புதுப்பிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
தேசிய வேளாண்மை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் உள்நாட்டு மீனவர்கள் பயன்பெறும் வகையில் 10 மீன் குஞ்சு உற்பத்தி நிலையங்கள் ரூ.50 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளன. நாகப்பட்டினத்தில் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகத்தின் மூலம் ரூ.1 கோடி செலவில் மீன் சுத்தப்படுத்தும் நிலையம் மீன்வள மேம்பாட்டு வாரிய நிதியுதவியுடன் அமைக்கப்பட்டுள்ளது.