

முதல்வராக ஜெயலலிதா பதவி யேற்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகாததால் அதிமுகவினரிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை பெற்றதால் ஜெயலலிதா, உடனடியாக முதல்வர் பதவியை ஏற்பார் என அதிமுகவினர் எதிர்பார்த்தனர். இதற்கு வசதியாக நேற்று முன்தினம் மாலையே ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவை ராஜினாமா செய்து, ஆளுநரி டம் கடிதம் கொடுக்கும் என்றும், இதையடுத்து அதிமுக எம்எல்ஏக் கள் கூடி, ஜெயலலிதாவை முதல்வராக தேர்ந்தெடுப்பார்கள் என்றும் தகவல்கள் வந்தன. ஆனால், அமைச்சரவைக் கூட்டம் பற்றியோ, எம்எல்ஏக்கள் கூட்டம் பற்றியோ அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகாதது அதிமுக தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அதிமுக வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘‘எம்எல்ஏக்கள் கூட்டம், பதவி ஏற்பு குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை. நல்ல நாள் பார்த்துதான் எதையும் செய் வார்கள். அதிகாரப்பூர்வமாக இது வரை எதையும் கட்சித் தலைமை அறிவிக்கவில்லை’’ என்றனர்.
தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறும்போது, ‘‘வரும் 17-ம் தேதி அமாவாசை என்பதால் அன்று ஜெயலலிதா பதவி ஏற்கலாம் எனத் தெரிகிறது. ஓரிரு நாளில் பன்னீர்செல்வம் ராஜினாமா செய்யவும், உடனடியாக எம்எல்ஏக் கள் கூட்டத்தை நடத்தி ஆளுநரை சந்திக்கவும் வாய்ப்புள்ளது’’ என்ற னர்.
இதற்கிடையே, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பில் சில குறைகள் இருப்பதாக திமுக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சுட்டிக் காட்டியுள்ளன.
தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ், பாமக, திமுக உள்ளிட்ட கட்சிகள் தெரிவித்துள்ளன.
முதல்வராக பதவி ஏற்ற பிறகு, கர்நாடக அரசு மேல் முறையீட்டுக்கு சென்றால் சிக்கல் ஏற்படலாம் என்பதால், அடுத்தடுத்த நிகழ்வுகளை பொறுத்தே அதிமுக தலைமையின் முடிவுகள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.