

‘தி இந்து எஜுகேஷன் பிளஸ்’ சார்பில் சென்னையில் நடத்தப்பட்ட 2 நாள் சர்வதேச கல்வி கண்காட்சி நேற்றுடன் நிறைவுற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
‘தி இந்து எஜுகேஷன் பிளஸ்’ சார்பில் ஆண்டுதோறும் சர்வதேச கல்வி கண்காட்சிகள் நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில், 8-வது ‘தி இந்து எஜுகேஷன் பிளஸ்’ 2 நாள் சர்வதேச கல்வி கண்காட்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் 53 நாடுகளைச் சார்ந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் பங்கேற்றன.
இந்த கண்காட்சியில் பங்கேற்பதற்கு மாணவர்கள் ஆர்வமுடன் வந்தனர். 2 நாள் கண்காட்சியில் ஆயிரக்கணக்கில் மாணவர்களும் பெற்றோர்களும் பங்கேற்றனர். வழக்கமாக, இளநிலை பட்டபடிப்பு படித்துவிட்டு மேல் படிப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புபவர்களே அதிகளவில் கண்காட்சியில் பங்கேற்று வந்த நிலையில், இளநிலை படிப்புக்காக வெளிநாடு செல்ல விரும்பி ஏராளமான பிளஸ் 2 மாணவர்கள் இக்கண்காட்சியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.