

மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவை கண்டித்து வரும் 30-ம் தேதி நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட 11 தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன. இதில் பஸ், லாரி, ஆட்டோ உள்ளிட்ட பல்வேறு வாகனங்களை ஓட்டும் ஒரு கோடி பேர் பங்கேற்கவுள்ளனர்.
நம் நாட்டில் கடந்த 2013-ல் மட்டும் மொத்தம் 4,86,476 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இவற்றில், 4,94,893 பேர் காய மடைந்துள்ளனர். மொத்தம் 1,37,572 பேர் இறந்துள்ளனர். சாலை விபத்துகளை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுதவிர, நெடுஞ்சாலை களின் தரம் உயர்த்தப்பட்டும் வருகிறது. ஆனால், சாலை விபத்துகள் குறையவில்லை.
எனவே, மோட்டார் வாகன சட் டத்தை திருத்த முடிவு செய்யப் பட்டது. அதன்படி, புதிய கமிட்டி அமைத்து அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர், ஜப்பான், ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் நடைமுறைகளை பின் பற்றும் வகையில், பல முக்கிய அம்சங்களைக் கொண்ட வரைவு சட்டத் திருத்தம் உருவாக்கப் பட்டுள்ளது.
புதிதாக வரவுள்ள மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தில் அபராதத் தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஒட்டினால் ரூ.500, இன்சூரன்ஸ் இன்றி ஓட்டினால் ரூ.10,000, ஓட்டுநர் உரிமம் இன்றி ஓட்டினால் ரூ.10,000, செல்போன் பேசிக் கொண்டே ஓட்டினால் ரூ5,000 அபராதம் விதிக்கப்படும். மேலும் தொடர்ந்து 3 முறை சிக்கினால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக தொமுச பொதுச் செயலாளர் சண்முகம், பொருளாளர் கி.நடராஜன் ஆகி யோரிடம் கேட்டபோது, ‘‘நாடு முழுவதும் மாநில அரசுகள் மூலம் ஒரு லட்சத்து 15 ஆயிரம் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற் றில், 7 லட்சம் பேர் அரசு ஓட்டு நர்களாக பணியாற்றுகின்றனர். தினமும் 10 கோடி பேர் பயணம் செய்கின்றனர். குறிப்பாக, தமிழகம், ஆந்திரம், கேரளம், கர்நாடகம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் மட்டுமே அதிகபட்சமாக 80 ஆயிரம் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
மத்திய அரசு கொண்டுவரவுள்ள மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதாவில் மாநில அரசுகளின் பொது போக்குவரத்து துறையின் உரிமைகள் பறிக்கப்படும் விதத்தில் இருக்கின்றன. பன்னாட்டு தனியார் நிறுவனங்களுக்கு முன் னுரிமை அளிக்கப்படுகிறது. மாநில அரசுகளுக்கு வர வேண்டிய வாகன வரி மத்திய அரசுக்கு சென்றுவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த புதிய சட்ட மசோதாவை எதிர்த்து தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 11 தொழிற்சங்கங்கள் சேர்ந்து வரும் 30-ம் தேதி நாடு முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன. மாநிலங்களில் உள்ள அரசு போக்குவரத்துக் கழகங்களின் லட்சக்கணக்கான ஊழியர்கள் திரளாக பங்கேற்கவுள்ளனர்’’ என்றனர்.
தமிழ்நாடு ஆட்டோ தொழி லாளர்கள் சம்மேளன (ஏஐடியுசி) மாநில பொதுச் செயலாளர் சேஷசயனம் கூறியபோது, ‘‘புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தத்தின்படி வாகனப் பதிவு, வாகனச் சோதனை, தகுதிச் சான்று வழங்குதல் உள்ளிட்ட பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது. எனவே, இந்த சட்ட மசோதாவை எதிர்த்து லாரி, ஆட்டோ, தனியார் பஸ் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர் கள் பங்கேற்கின்றனர்.