

புதுச்சேரியில் கால்நடை பராமரிப் புத்துறை ஊழியர் வீட்டில் 84 சவரன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
புதுச்சேரி மேட்டுப்பாளையம் அருகில் உள்ள சண்முகாபுரம் அண்ணா வீதி 2-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் வேல் முருகன் (37). இவர் காரைக்கால் கால்நடை பராமரிப்புதுறை அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சரளா (37). இவர் புதுச்சேரி சுகாதாரத் துறையில் மருந்தாளுனராக பணி புரிகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
வேல்முருகன் தனது குடும்பத்துடன் கடந்த 17-ம் தேதி திருப்பதி கோயிலுக்கு சென்றார். நேற்று அதிகாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது முன்பக்க கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. பின்பக்க கதவு திறந்து கிடந்தது.
அப்போது பூஜை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த தங்க நகைகள் மற்றும் வீட்டின் சீலிங் ஃபேன் கோப்பையில் மறைத்து வைத்திருந்த 84 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்று இருப்பது தெரியவந்தது. இது குறித்து மேட்டுப்பாளையம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சப்-இன்ஸ்பெக்டர் பால முருகன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
சீலிங் ஃபேனில்
புதுச்சேரியில் திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடைபெறு வதால் வேல்முருகன் தனது நகைகள் அனைத்தையும் மூன்றாக பிரித்து 3 சீலிங் ஃபேன் மேலே உள்ள கோப்பைகளில் மறைத்து வைத்துள்ளார். நகைகளை வைத்தபிறகு அவை விழுந்து விடக்கூடாது என்பதற்காக டேப்போட்டு ஒட்டி வைத்து பாதுகாத்து வந்தார். இருப்பினும் மர்ம நபர்கள் ஃபேனின் கோப்பையில் மறைத்து வைத்திருந்த நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.
இது பற்றி போலீஸார் தரப்பில் கூறும்போது: ‘‘வேல்முருகன் வீட்டின் கதவு உடைக்கப்பட்டதாகத் தெரியவில்லை. வீட்டின் கதவைத் திறந்து சீலிங் ஃபேனில் இருந்த நகைகள் திருடப்பட்டுள்ளது. எனவே அவருக்கு நெருங்கிய அல்லது தெரிந்த நபர்கள்தான் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும். இது தொடர்பாக விசா ரணை நடத்துகிறோம் என்றார்.