Published : 12 Apr 2015 11:14 AM
Last Updated : 12 Apr 2015 11:14 AM

ஜனநாயக முறைப்படியே கட்சி தேர்தல்: மத்திய நிர்வாக குழு உறுப்பினர் நல்லகண்ணு தகவல்

கட்சியின் மாநில செயலர் தேர்தல் ஜனநாயக முறைப்படியே நடைபெற்றது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர் நல்லகண்ணு தெரிவித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில செயலர் தேர்வு முறை யாக நடைபெறவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், அக்கட்சியின் மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர் நல்லகண்ணு மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:

கட்சியின் மாவட்ட, மாநில, அகில இந்திய மாநாடு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். அதன்படி, கட்சியின் மாநில மாநாடு கோவையில் மார்ச் மாதம் 25 முதல் 28-ம் தேதி வரை நடைபெற்றது. அந்த மாநாட்டில் முறையாகத் தேர்தல் நடைபெற்று ஜனநாயக முறைப்படியே முத்தரசன் மாநில செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால், முறையாக தேர்தல் நடைபெறவில்லை எனக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட் டுள்ளது. இது முற்றிலும் தவறு. வழக்கு தொடர்ந்தவர்கள் கட்சி உறுப்பினர்களே தவிர, மாநிலக் குழு உறுப்பினர்கள் அல்ல.

திருப்பதி அருகே தமிழக கூலித் தொழிலாளர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இது மிகவும் வேதனையானது. இதில் ஆந்திர அரசின் விசாரணையை ஏற்க முடியாது. எனவே, உயர்நிலை குழு நீதி விசாரணை நடத்த வேண்டும்.

ஆங்கிலேய அரசு 1894-ம் ஆண்டு கொண்டு வந்த விவசாய நிலங்களை கையகப்படுத்தும் சட்டத்தில் பல்வேறு போராட்டங் களுக்குப் பிறகே மாற்றம் ஏற்பட்டது. ஆனால், தற்போதைய மத்திய அரசு 120 ஆண்டுகளுக்கு முந்தைய சட்டத்தையே மீண்டும் கொண்டு வர முயற்சி செய்கிறது. இதன் மூலம் விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் நிலம் பெரிய நிறுவனங்களுக்கு ஒப்படைக்கப்படும்.

இதை எதிர்த்து தமிழகத்தில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டம் நடத்துகின்றன.

மத்திய அரசு ஏழைகளுக்கான மானியத்தை குறைத்து பெரு முதலாளிகளுக்கே சலுகை வழங்கி வருகிறது.

வேளாண் துறை அதிகாரி முத்துக்குமாரசாமி மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

அப்போது மாநில துணைச் செயலர் சி.மகேந்திரன், மாவட்டச் செயலர் காளிதாஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x