

தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் போராட்டம் தேவையற்றது. அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததால் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் பணியில் பாதிப்பு ஏற்படவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சத்துணவுத் திட்டத்தின் கீழ் ஒன்றாம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 54.63 லட்சம் குழந்தைகளுக்கு 42,619 சத்துணவு மையங்கள் மூலமாக கலவை சாதம் அளிக்கப்படுகிறது. இதற்காக 1.28 லட்சம் பணியாளர்கள் சிறப்பு காலமுறை ஊதிய அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இத்திட்டத்துக்காக 2014-15-ல் ரூ.1412.88 கோடி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் 15-ம் தேதி (இன்று) காலவரையற்ற போராட்டத்தை தொடங்குவதாக அறிவித்தது. இந்த சங்கம் உட்பட 11 சத்துணவு ஊழியர் சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகளில் 12 கோரிக்கைகள் அரசால் பரிசீலிக்கப்பட்டு தகுந்த உத்தரவுகள் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டதை ஏற்று போராட்டத்தை கைவிட்டனர். அதன் பின்னரும் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் போராட்டத்தை தொடங்கினர்.
தமிழக அரசு மாவட்ட ஆட்சியர்கள், அரசு அலுவலர்கள் மூலம் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்ததால் சத்துணவு மையங்கள் முழுவதும் திறக்கப்பட்டு, சமைக்கும் பணி நடந்து வருகிறது. பத்தாம் வகுப்பு தேர்வு முடிந்ததால் மீதமுள்ள வகுப்புகளைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கலவை சாதம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தால் தொடங்கப்பட்ட போராட்டம் தேவையற்றது. அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் பணி சிறப்பாக நடந்து வருகிறது.
இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.