

தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் பாதிப்புடன் 29 பேர் சிகிச்சைப் பெற்று வருவதாக தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் (டிபிஎச்) டாக்டர் குழந்தைசாமி கூறியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் பன்றிக்காய்ச்சல் பரவத் தொடங்கியது. இதையடுத்து பன்றிக்காய்ச்சலை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக பொது சுகாதாரத்துறை எடுத்து வருகிறது.
இதன் மூலம் தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் (டிபிஎச்) டாக்டர் குழந்தைசாமி கூறியதாவது:
தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி முதல் இதுவரை பன்றிக்காய்ச்சலால் 660 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 614 பேர் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு சென்றுவிட்டனர். 17 பேர் உயிரிழந்துள்ளனர். 29 பேர் பன்றிக்காய்ச்சல் பாதிப்புடன் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் பரவத் தொடங்கியதுமே முன்னெச்சரிக்கை நடவடிக் கைகள் எடுக்கப்பட்டன.
அரசு மருத்துவமனைகளில் பன்றிக் காய்ச்சலுக்கு சிகிச்சை அளித்த தனி வார்டு ஏற்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பன்றிக்காய்ச்சல் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டன. ஒருவர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டால் அவரது குடும்பத் தினர் மற்றும் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு டாமி ஃபுளூ மாத்திரைகள் கொடுக்கப்பட்டன. இதுகுறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரமும் பொதுமக்களிடையே செய்யப்பட்டது.
இதன்மூலம் தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.