

தமிழகத்தில் சங்கத் தமிழ், திருக்குறள் ஓவியம், பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடங்கள் விரைவில் திறக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் சென்னை பல்கலைக்கழகத்தில் சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விழா நேற்று நடந்தது. விழாவில் 1,330 குறள்களையும் ஒப்பித்த பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 36 மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரத்துக்கான காசோலைகள், கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் தமிழில் 36 பிரிவுகளில் சிறந்த நூல்கள் படைத்த ஆசிரியர்கள், பதிப்பகத்தார் என 171 பேருக்கு ரூ.28.32 லட்சம் மதிப்பிலான ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.
பரிசு, பாராட்டுச் சான்றிதழ்களை தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி வழங் கினார். அவர் பேசியதாவது:
கடந்த 2012-ம் ஆண்டு முதல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ஆணையின் படி சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடப் படுகிறது. உலகத் தமிழ்ச் சங்கத்துக்கு ரூ.25 கோடியில் கட்டிடம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. சங்கத் தமிழ் காட்சிக்கூடம், திருக்குறள் ஓவியக் காட்சிக்கூடம் பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடம் ஆகியவை விரைவில் திறக்கப்பட உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக வரவேற்புரை நிகழ்த்திய தமிழக தமிழ் வளர்ச்சித் துறை செயலாளர் ராஜாராம் பேசும்போது, ‘‘தமிழர்கள் சித்திரை முதல் நாளில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடுகின்றனர். இதற்கு சில நாட்கள் முன்போ, பின்போதான் கேரள மக்கள் ‘விஷு’ புத்தாண்டும், ஆந்திர, கர்நாடக மக்கள் ‘யுகாதி’ புத்தாண்டும் கொண்டாடுகின்றனர். இது மட்டுமின்றி, பிஹார், ஜார்க்கண்ட், காஷ்மீர், மகாராஷ்டிரம், அசாம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலும் சித்திரை மாதத்தை ஒட்டியே புத்தாண்டு கொண்டாடப்படுகிறது’’ என்றார்.
விழாவில், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தாண்டவன், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் விஜயராகவன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவின் தொடக்கத்தில் கவிஞர் முத்துலிங்கம் தலைமையில் திரைப்படப் பாடலாசிரியர் சிநேகன் பங்கேற்ற கவியரங்கமும், இறுதியில் பேராசிரியர் கு.ஞான சம்பந்தன் தலைமையில் பட்டி மன்றமும் நடந்தன.