ஆந்திரத்தை கண்டித்து தமிழத்தில் பரவலாக ஆர்ப்பாட்டம்

ஆந்திரத்தை கண்டித்து தமிழத்தில் பரவலாக ஆர்ப்பாட்டம்
Updated on
2 min read

ஆந்திர வனப்பகுதியில் போலீஸாரால் தமிழகத்தைச் சேர்ந்த 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்று (புதன்கிழமை) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பதி வனப்பகுதியில் செம்மரம் கடத்தலில் ஈடுபட்ட தமிழக தொழிலாளர்கள் 20 பேரை ஆந்திர போலீஸார் சுட்டுக் கொன்ற சம்பவம், தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர அரசையும், அம்மாநில போலீஸையும் கண்டித்து, சென்னையில் உள்ள ஆந்திர கிளப்பை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை தியாகராய நகர் விஜயராகவா சாலையில் உள்ள ஆந்திர கிளப்பை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் அன்பு தென்னரசு தலைமையில் முற்றுகை இட்டனர். ஆந்திர அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆந்திர மாநில முதவர் சந்திரபாபு நாயுடுவின் உருவ பொம்மையை எரிக்க முயன்றபோது, போலீஸார் தடுக்க நினைத்து 100 பேரை கைது செய்தனர்.

இதனையடுத்து, விஜய ராகவா சாலையில் நான்கடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வெங்கட் நாராயணா சாலையில் உள்ள திருப்பதி தேவஸ்தானம் கோயில், ஆந்திர வங்கி மற்றும் ஏடிஎம்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஆந்திர கிளப்பை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர் | படம்: எம்.மூர்த்தி

வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று வழக்கறிஞர் மோகன கிருஷ்ணன் தலைமையில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.

அசோக்நகர் 100 அடி சாலையில் பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் தனபாலன் தலைமையில் ஆந்திர அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை திருமுல்லைவாயலில் ஆந்திர வங்கிக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்திய தமிழர் விடுதலை கழகத்தினர் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் பெங்களூர்- சென்னை லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டம் நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த 50 பேரை போலீஸ் கைது செய்தது.

தஞ்சையில் ஆந்திரா வங்கியை முற்றுகையிட்ட வ.உ.சி. பேரவை அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி மற்றும் ராஜபாளையத்தில் ஆந்திரா வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

ஆந்திரா பேருந்துகள் 2-வது நாளாக நிறுத்தம்

சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு 2வது நாளாக பேருந்துகள் இயக்கப்படவில்லை. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆந்திர பேருந்துகளுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆந்திரா செல்லும் ரயில்களிலும் போலீஸார் பாதுகாப்புப் பணிக்காக அமர்த்தப்பட்டுள்ளனர்.

சென்னை கோயம்பேட்டில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் இன்று (புதன்கிழமை) 2வது நாளாக நிறுத்தப்பட்டுள்ளன. நெல்லூர், திருப்பதி, நகரி, குண்டூர் செல்லும் பேருந்துகள் வரிசையாக நிறுத்தப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திர பேருந்துகள் சேதம்

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆந்திர மாநில பேருந்துகள் மீது இன்று காலை சிலர் கல்வீசி தாக்கியதால் பேருந்துகள் சேதமடைந்தன.

இதேபோல், சென்னை கோயம்பேட்டில் நேற்றிரவும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, ஆந்திர பேருந்து சேவை வெகுவாக பாதிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு இயக்கப்படும் பேருந்துகள் உள்ள பகுதியில் தீவிரப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் உள்ள ஆந்திர நிறுவனங்களான ஆந்திரா வங்கி, ஆந்திரா கிளப், ஆந்திரா சபா, ஆந்திரா மெஸ், ஆந்திரா பேருந்துகள் மற்றும் தமிழக எல்லையில் ஆந்திர மக்கள் அதிகம் வசிக்கும் இடங்கள் என அனைத்து இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in