சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற குழு: சங்க நிர்வாகிகளிடம் அமைச்சர் உறுதி

சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற குழு: சங்க நிர்வாகிகளிடம் அமைச்சர் உறுதி
Updated on
1 min read

ஓய்வூதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற குழு அமைப்பதாக அமைச்சர் உறுதி அளித்ததாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத் தலைவர் பழனிச்சாமி தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் 42,619 சத்துணவு மையங்களில் 1,28,130 சத்துணவு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வூதியத்தை ரூ.3,500 ஆக உயர்த்த வேண்டும், பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஏப்ரல் 15-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப் போவதாக சத்துணவு ஊழியர்கள் சங்கங்கள் அறிவித்தன.

இதையடுத்து கடந்த 13-ம் தேதி அமைச்சர்கள் வளர்மதி, பழனியப்பன், வீரமணி ஆகியோர் சத்துணவு ஊழியர் சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஊழியர் களின் 12 கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொண்டது. தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் தவிர மற்ற சங்கங்கள் இதை ஒப்புக் கொண்டு போராட்டத்தை வாபஸ் பெற்றன.

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் மட்டும் போராட்டத்தை தொடர்வதாக அறிவித்தது. அதன்படி, கடந்த 15-ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தைத் தொடர்ந்தனர். உண்ணாவிரதம், முற்றுகை என போராட்டங்கள் வலுவடைந்தன. ஆட்சியர் அலுவலகங்கள் முன் போராட்டம் நடத்திய சத்துணவு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், அரசு பேச்சு வார்த்தைக்கு அழைத்ததால், நேற்று முன்தினம் இரவு தமிழ் நாடு சத்துணவு ஊழியர் சங்கம் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தது. இதைத்தொடர்ந்து நேற்று பிற்பகல் தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத் தலைவர் பழனிச்சாமி உள்ளிட்ட நிர்வாகி களுடன் சமூக நலத்துறை அமைச்சர் வளர்மதி பேசினார்.

பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த பழனிச்சாமி கூறும்போது, ‘‘எங்களின் 12 கோரிக்கைகளை ஏற்கெனவே அரசு ஏற்றுள்ளது. மீதமுள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற குழு அமைப்பதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளார். குழந்தைகளுக்கு சத்துணவு பரிமாறுவது முக்கியமானப் பணி. அமைச்சரின் உறுதிமொழியை ஏற்று போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளோம்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in