

பஞ்சாலைகளில் பணியாற்றும் வளர்இளம் பெண்களை ஒப்பந்த அடிப்படையில் வேலைக்குச் சேர்க்கும் நவீன கொத்தடிமை முறையை ஒழிப்பதற்காக பல்வேறு அமைப்புகளின் கூட்டுச் செயல்பாட்டிற்கான கலந்தாய்வுக் கூட்டம் சென்னை இந்திய செஞ்சிலுவைச் சங்க கூட்ட அரங்கில் நடைபெற்றது.
வான்முகில் மற்றும் செரீன் சேவை அமைப்பும் இணைந்து நடத்திய இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில்,பல மாவட்டங்களிலிருந்து வந்திருந்த களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
வான்முகில் அமைப்பின் இயக்குநர் எம்.ஏ.பிரிட்டோ கூறியதாவது:
கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 2 லட்சம் கிராமப்புற ஏழை வளர்இளம் பெண்கள் பஞ்சாலைகளில் சுமங்கலித் திட்டம் போன்ற முகாம் கூலி முறையில் நவீன கொத்தடிமைகளாக நடத்தப்படுகின்றனர்.
மிகக் குறைந்த ஊதியம்,பணிப் பாதுகாப்பின்மை,பாலியல் தொல்லைகள் போன்ற பல மனித உரிமை மீறல்களை அவர்கள் எதிர்கொண்டு வருகின்றனர். வளர்இளம் பெண்களின் வாழ்வில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்த அனைத்து அமைப்புகளும் ஒருமித்த குரலில் போராட வேண்டிய சூழலில் ஒன்றுபட்டு இருக்கின்றோம்.” இவ்வாறு அவர் கூறினார்.
சிஐடியு துணைப் பொதுச்செயலாளர் ஆர்.கருமலையான், ஏஐடியுசி மாநிலப் பொதுச்செயலாளர் டி.எம்.மூர்த்தி,ஏஐடியுசி திருநெல்வேலி மாவட்டச் செயலாளர் காசிவிஸ்வநாதன், யுனிசெப் நிறுவனத்தைச் சேர்ந்த வித்யாசாகர்,செரீன் சேவை அமைப்பின் இயக்குநர் எஸ்.ஜேம்ஸ்விக்டர் ஆகியோர் கலந்து கொண்டனர்.