

நேபாளத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திமுக எம்.எல்.ஏ.,க்கள் எம்.பி.க்கள் அனைவரும் தங்கள் ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதியாக வழங்குமாறு திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நேபாளத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கானோர் பலியாகினர். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தங்கும் இடமின்றி தவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி, நேபாள் துயர் துடைக்கும் பணியில் இந்தியா முழுமையாக ஒத்துழைக்கும் என்று அறிவித்திருக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் துயர் துடைப்பு நிதிக்காக ஒரு மாத கால ஊதியத்தை அளிக்கப்போவதாக செய்தி வந்துள்ளது.
இந்த நிலையில் திமுக சார்பிலும் இந்தத் துயர் துடைப்பு நிதிக்கு உதவிட வேண்டுமென்ற அடிப்படையில், திமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் தங்களுடைய ஒரு மாத ஊதியத்தை நேபாள மக்களின் துயர் துடைக்க வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்" இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.