

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு கூட்டம், நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் ஏப்.25-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற்றது.
கூட்டத்துக்கு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ப.சண்முகம் தலைமை வகித்தார். மாநிலச் செயலா ளர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிறைவு நாளான நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம்: சிறு, குறுந் தொழில்களை அழிக்கும் வகையில் அமைந்துள்ள, ‘தீப்பெட்டி, ஊறுகாய் உள்ளிட்ட 20 பொருட்களை சிறு, குறுந் தொழில் களுக்கான பட்டியலிலிருந்து நீக்கு வது’ என்ற முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். விவசாயக் கடனுக்கான வட்டியை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும்.
நெல்லை வேளாண்மை அதிகாரி முத்துக்குமாரசாமி, சென்னை நியாயவிலைக் கடை எடையாளர் இளங்கோ ஆகியோர் அமைச்சர்கள், உயரதிகாரிகள் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
சாலைப் பாதுகாப்பு மசோதா என்ற பெயரில் மோடி அரசு கொண்டு வந்துள்ள மோசடியான மசோதாவை எதிர்த்து அனைத்து சாலைப் போக்குவரத்துத் துறை தொழிற்சங்கங்களும் ஏப்.30-ம் தேதி நடத்தவுள்ள அகில இந்திய வேலை நிறுத்தத்துக்கு மார்க்சிஸ்ட் கட்சி முழு ஆதரவை அளிக்கும்.
மக்கள் சந்திப்பு இயக்கம்
நிலம் கையகப்படுத்தும் சட்டம், வேளாண்மைக் கடன் வட்டி உயர்வு, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பது, 100 நாள் வேலைத் திட்டம், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு திட்டங் களுக்கு நிதி குறைப்பு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு ரூ.6 லட்சம் கோடி அளவுக்கு சலுகைகள் வழங்குவது, சிறுபான்மை மக்களுக்கு எதிரான அச்சுறுத்தல், இயற்கை வளங்கள் சூறையாடல், லஞ்சம் ஆகியவற்றுக்கு எதிராக மக்கள் பிரச்சினைகளை முன் வைத்து மக்கள் சந்திப்பு இயக்கத்தை நடத்துவது.
இந்த இயக்கத்தின் மூலம், மே 5-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 5,000 குழுக்களாக 50 லட்சம் குடும்பங்களைச் சந்திப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.