சாலையில் கிடந்த 10 பவுன் நகையை போலீஸில் ஒப்படைத்த துப்புரவு பணியாளர்கள்

சாலையில் கிடந்த 10 பவுன் நகையை போலீஸில் ஒப்படைத்த துப்புரவு பணியாளர்கள்
Updated on
1 min read

வண்ணாரப்பேட்டையில் சாலையில் கிடந்த 10 பவுன் நகைகளை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் கண்டெடுத்து போலீஸில் ஒப்படைத்தனர்.

சென்னை மாநகராட்சி தண்டை யார்பேட்டை மண்டலம் 4 ல் துப்புரவு பணியாளர்களாக இருப்பவர்கள் செல்வம், கஜேந்திரன். நண்பர்களான இருவரும் நேற்று முன்தினம் இரவு பழைய வண்ணாரப்பேட்டை கல்லறை சாலை வழியாக நடந்து வந்தனர்.

அப்போது சாலையில் ஒரு பை கிடந்துள்ளது. அதை எடுத்து பார்த்தபோது, பைக்குள் 10 பவுன் நகைகள் இருந்தன. துப்புரவு பணியாளர்களான அவர்கள் அந்த நகைகள் மீது ஆசைப்படாமல் அதை பழைய வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

சிறிது நேரத்தில் அதே காவல் நிலையத்துக்கு வண்ணாரப்பேட்டை எம்.எஸ்.கோயில் தெருவில் வசிக்கும் நகை கடை அதிபர் நரேந்திரகுமார் வந்து, தனது நகைப் பையை தவற விட்டதாக புகார் தெரிவித்தார். போலீஸார் நடத்திய விசாரணையில் செல்வம், கஜேந்திரன் கண்டெடுத்தது நரேந்திரகுமாருக்கு சொந்தமான பைதான் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நகையை நரேந்திரகுமாரிடம் ஒப்படைத்தனர்.

மாநகராட்சி ஊழியர்கள் செல்வம், கஜேந்திரன் இருவரையும் காவல் உதவி ஆணையர் தெய்வசிகாமணி உட்பட அனைத்து போலீஸாரும் பாராட்டினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in