Last Updated : 16 Apr, 2015 10:39 AM

 

Published : 16 Apr 2015 10:39 AM
Last Updated : 16 Apr 2015 10:39 AM

விளையாட்டுப் பொருட்களின் உதவியுடன் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் செயல்விளக்கம்: புதுமையான முயற்சிக்காக தேசிய விருது பெற்ற அரசுக் கல்லூரி முதல்வர்

பள்ளி வகுப்பறையில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் மத்தியில் ஆணிகள் அடிக்கப்பட்ட மரப்பலகையில் மல்லாந்து படுத்துக்கொண்ட புதுக்கோட்டை அரசு கல்வியியல் கல்லூரியின் முதல்வர் அ.சுப்பையா பாண்டியன் மீது மற்றொரு மரப்பலகை வைக்கப்பட்டது.

அதன்மீது செங்கற்களை அடுக்கி வைத்து அதை மற்றொருவர் ஓங்கி அடித்தார். அந்த நொடியில் கண்களையும், காதுகளையும் மூடிக்கொண்டவர்கள், என்னவாயிற்றோ என்று எண்ணி கண்களைத் திறந்து பார்த்தனர்.

செங்கற்கள் மட்டும் துண்டானதே தவிர கல்லூரி முதல்வருக்கு எந்த பாதிப்பும் இல்லை. சிரித்துக் கொண்டு எழுந்த கல்லூரி முதல்வர், “இது அழுத்தம், நிலைமம் என்பதற்கான செயல்விளக்கம் தான்” என விவரித்தார்.

இப்படியே, ராக்கெட்டை விண் ணில் செலுத்துதல், நீர்மூழ்கி கப்பல் இயக்கம், விமானம் பறப்பது, லிஃப்ட் மற்றும் கட்டிடத்தின் தரைத் தளங்களில் செல்போன் இயங் காதது என சிறுவர்களின் விளை யாட்டுப் பொருட்களைக் கொண்டு நூற்றுக்கணக்கான சோதனைகளை செய்து காண்பித்தார்.

இவ்வாறு நவீன அறிவியல் தொழில்நுட்பங்களைக் கொண்டு சோதனைகளை வடிவமைத்தமைக் காக கடந்த பிப்.28-ல் குடியரசுத் தலைவரிடமிருந்து தேசிய விருது பெற்றுள்ளார் அ.சுப்பையா பாண் டியன். இதுகுறித்து ‘தி இந்து’விடம் அவர் கூறியதாவது:

‘‘தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்பத்தின் மூலம் பள்ளி ஆசிரியர் களுக்கு பயிற்சி அளிக்கும் வாய்ப்பு ஏற்பட்டபோது, பாடத்திட்டத்தில் உள்ளவற்றை புரியவைக்க வேண்டு மென்பதற்காக சோதனைகளை புதிது புதிதாக வடிவமைத்தோம்.

அப்படியே ஆர்வமிகுதியால் தற்போது ஏறத்தாழ 400 அறிவி யல் சோதனைகள் வடிவமைக்கப் பட்டுள்ளன. இது எனது முயற்சியின் 10 சதவீதம்தான்.

பாடத்திலுள்ள அறிவியல் தத்துவங்களை மாணவர்கள் மனப் பாடம் செய்வதால்தான் திறன் வீணாகிவிடுகிறது. மனப்பாடம் செய்வதல்ல அறிவியல். ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்விகளுக்கு விடைகாணும் முறைதான் அறிவியல்.

நாட்டில் பசி, பட்டினி, வேலை யில்லாத் திண்டாட்டம், நோய், சூழலுக்கு கேடு, மின்பற்றாக்குறை, நதிகளை இணைத்தல் போன்ற பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு அறிவியல்.

நாட்டின் வளர்ச்சிக்கு ஆயுதம்

நம் வாழ்வின் செயல்பாடுகள் அனைத்தையும் அறிவியலே தீர்மானிக்கிறது. சமூக, பொருளாதார மாற்றங்களுக் கெல் லாம் அறிவியல்தான் காரணம். கற்காலத்திலிருந்து தகவல் தொழில்நுட்ப காலத்துக்கு மனிதனை அழைத்து வந்திருப்பதும் அறிவியல்தான்.

அறிவியல் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டி ருக்கிறது. அதற்கேற்ப மாணவர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டுமெனில் அறிவியல் சிந்தனையை தூண்ட வேண்டும். அதற்கு அறிவியலை தமிழில் எளிமைப்படுத்தி சோதனை மூலம் விளக்குவதுதான் தீர்வாகும்.

ஆகையால், கற்றதை மூடிவைத்து வீணடித்துவிடக் கூடாது என்பதற்காக நான் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி தமிழகம் முழுவதும் சென்று மாணவர்களுக்கு சோதனைகள் மூலம் பயிற்சி அளித்து வருகிறேன். விரும்பி அழைக்கும் பள்ளிகளுக்கு நேரில் சென்று மாணவர்களின் அறிவுத்திறனை வளர்ப்பதே எனது நோக்கமாகும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x