

பாரதிய மஹிளா வங்கி சார்பில் சாலையோர வியாபாரிகள் 60 பேருக்கு ரூ.3 லட்சம் கடன் உதவி வழங்கப்பட்டது.
தமிழ்நாடு சாலையோர வியாபாரத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு மற்றும் அண்ணாசாலையில் உள்ள பாரதிய மஹிளா வங்கி கிளை சார்பாக ‘சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார மேம்பாடு’ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சாலையோர வியாபாரிகள் புதியதாக சிறு தொழில் தொடங்குவதற்கான கடன் உதவி வழங்கப்பட்டது. சாலையோர வியாபாரிகள் 60 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் அளவில் மொத்தம் ரூ.3 லட்சத்துக்கான கடன் உதவி வழங்கப்பட்டது. இதனை வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் உஷா ஆனந்த சுப்பிரமணியம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய உஷா ஆனந்த சுப்பிரமணியம், “சாலையோர சிறு வியாபாரத்தில் பெண்களின் பங்கை அதிகப்படுத்த வேண்டும். பெண்கள் தொழில் தொடங்குவதை ஊக்குவிக்க கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. சாலையோர வியாபாரிகள் தங்களுடைய தொழிலில் வெற்றி பெற வேண்டும். அதற்காக அவர்கள் ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும். கடன் உதவி பெறும் வியாபாரிகள் தங்களுடைய கடனை விரைவில் திருப்பி செலுத்த முயற்சி செய்ய வேண்டும். அப்போதுதான் அடுத்த முறை அதிக தொகையை கடனாக பெறமுடியும்” என்றார்.
இந்நிகழ்ச்சியில் பாரதிய மஹிளா வங்கியின் அண்ணாசாலை கிளை மேலாளர் பாலகார்த்திகா, நுகர்வோர் பாதுகாப்பு குழுவின் ஆலோசகர் சரோஜா மற்றும் சாலையோர வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.