Last Updated : 16 Apr, 2015 04:24 PM

 

Published : 16 Apr 2015 04:24 PM
Last Updated : 16 Apr 2015 04:24 PM

போலீஸ் எச்சரிக்கையை மீறி ஆம்பூரில் தடையின்றி நடக்கும் பரிசுக் குலுக்கல்: ஏழை மக்கள் பாதிப்பு

தமிழக அரசால் தடை செய்யப் பட்ட பரிசுக் குலுக்கல் திட்டம் ஆம்பூரில் ஜோராக நடக்கிறது. வாரம் முழுவதும் நடக்கும் இந்த பரிசுக் குலுக்கல் திட்டத்தை மாவட்ட நிர்வாகம் தடை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழகத்தில் லாட்டரி, குலுக்கல் பரிசு திட்டம் போன்றவற்றுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில், ஆம்பூர் தாலுகா வுக்கு உட்பட்ட மின்னூர், பெரியாங் குப்பம், ஆலாங்குப்பம், மாதனூர், வீராங்குப்பம், தேவலாபுரம், வட புதுப்பட்டு, ரெட்டியூர் உள்ளிட்ட பகுதிகளில் கவர்ச்சிகரமான பரிசு திட்டங்களை அறிவித்து ஏழை, எளிய மக்களிடம் வாரந்தோறும் ரூ.100 வசூலிக்கப்படுகிறது.

ஒவ்வொரு பரிசுத் திட்டத்திலும் ஆயிரம் முதல் 5 ஆயிரம் பேரை இணைக்கின்றனர். வாரம் ரூ.100 வசூலிக்க ஏஜன்ட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பணம் வசூலிப்பதற்கு ஏற்ப ஏஜன்ட் களுக்கு கமிஷன் தொகை வழங்கப்படுகிறது. 5 ஆயிரம் பேரிடம் வாரம் ரூ.100 என மொத்தம் 5 லட்சம் ரூபாய் பொதுமக்களிடம் வசூலிக்கப்படுகிறது. குறைவான அளவு பரிசு கொடுத்துவிட்டு பெரும் தொகையை ஏமாற்றி விடுகின்றனர்.

வாரத்தின் 7 நாட்களிலும் ஆம்பூரில் வெவ்வேறு இடங்களில் குலுக்கல் நடைபெறுகிறது. இதற்காக நகரின் முக்கிய பகுதி களில் டிஜிட்டல் விளம்பர பலகை வைத்து அதில் கவர்ச்சிகரமான பரிசுகளை வழங்குவதாக அறிவிக் கின்றனர். ஆம்பூரில் போலீஸாரின் ஒத்துழைப்போடு குலுக்கல் பரிசுத் திட்டம் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுபோன்ற பரிசுத் திட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என மாவட்ட எஸ்பி செந்தில்குமாரிக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில், போலீஸார் ஆய்வு நடத்தி ஆம்பூரில் 2 திருமண மண்டபங்களில் நடக்க இருந்த குலுக்கல் பரிசு திட்டத்தை ரத்து செய்தனர்.

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குலுக்கல் பரிசு திட்டம் நடத்தக்கூடாது என போலீஸார் எச்சரிக்கை விடுத்தனர். ஆனால், போலீஸாரின் உத்தரவு காற்றோடு போச்சு என்ற கணக்கில், ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் சண்முகம் நகரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நேற்று காலை முதல் பகல் 1 மணி வரை குலுக்கல் பரிசு திட்டம் நடத்தப்பட்டது. இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்களுக்கு குறிப்பிட்ட பரிசுகள் தரப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து ஆம்பூர் டவுன் மற்றும் தாலுகா போலீஸாருக்கு தகவல் கொடுத்தும் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x