

துணிச்சலான செயல்கள், வீரதீர சாகசங்களுக்காக பெண்களுக்கு வழங்கப்படும் ‘கல்பனா சாவ்லா’ விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் யதீந்திரநாத் ஸ்வைன் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் துணிச்சலான செயல்கள் மற்றும் வீர சாகசங்களில் ஈடுபடும் பெண்களுக்கு ‘கல்பனா சாவ்லா’ விருதை தமிழக அரசு ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. 2014-ம் ஆண்டுக்கான ‘கல்பனா சாவ்லா’ விருது வரும் சுதந்திர தினத்தன்று வழங்கப்படவுள்ளது. இந்த விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இவ்விருதைப் பெற தகுதியானவர்கள் விண்ணப்பத்துடன் தங்களுடைய விரிவான தன்விவரக் குறிப்பு, ஆவணங் களை சேர்த்து ‘அரசு முதன்மைச் செயலாளர், பொது துறை, தலைமைச் செயலகம், சென்னை’ என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் ஜூன் 30-ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும்.
விருதுக்கு தகுதியான நபரை அரசால் நியமிக்கப்படும் தேர்வுக்குழு தேர்வு செய்யும். அவருக்கு கல்பனா சாவ்லா விருதுக்கான பதக்கம், ரூ.5 லட்சத்துக்கான காசோலையை தமிழக முதல்வர் வழங்குவார்.